சென்னை: தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் (நாளை, நாளை மறுநாள்) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் செப்.4, 5 ஆகிய தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். செப்.6,7 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரியில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நகரில் அதிகபட்ச வெப்ப நிலையாக 34 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்ப நிலையாக 27 டிகிரி செல்சியஸும் இருக்கக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்தத்தாழ்வு பகுதி வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுவடைந்து இன்று அதிகாலை அதே பகுதிகளில் ஆழ்ந்தக் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக நிலவியது. அது, இன்று காலை 8.30 மணி அளவில், வடக்கு ஒரிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக்கொண்டிருந்தது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை கடக்கும் என கூறப்படுகிறது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதுபோல,ஆந்திரா கடலோரப் பகுதிகள், மத்திய மேற்கு, தென் மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு அடுத்த 3 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.