சென்னை: தமிழகத்தில் வரும் செப்.26, 27 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ”வடமேற்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. செப்.25ம் தேதி மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றால், தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் கரையை கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மத்திய ஆந்திர பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை (செப்.23 தேதி) வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், செப்.24 முதல் 27-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
செப்.26, 27 தேதிகளில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை( செப்.23-ம் தேதி) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென் தமிழக கடலோரப் பகுதிகள், வட தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நாளை (செப்.23-ம் தேதி)முதல் செப்.24-ம் தேதி வரை சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். எனவே இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, விழுப்புரம் மாவட்டம் நேமூரில் 12 செ.மீ மழை, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் 11 செ.மீ மழை, ஆரணியில் 9 செ.மீ மழை, விழுப்புரம் மாவட்டம் வளத்தியில் 7 செ.மீ மழை, கஞ்சனூர், மயிலம், புதுச்சேரி திருக்கனூர், சேலம் மாவட்டம் ஏற்காடில் தலா 6 செ.மீ மழை, விழுப்புரம் மாவட்டம் ஆனந்தபுரம், ஈரோடு, கவுந்தப்பாடி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.” என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.