சென்னை: திருவள்ளூரில் 7 ஆண்டுகளாக வழிப்பறி கொள்ளையரை கண்டுபிடிக்க முடியாததால் 17.5 பவுன் நகைகளை பறிகொடுத்த மூதாட்டிக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி, இதுபோன்ற வழக்குகளில் இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து வழங்குவது தொடர்பாக தமிழக அரசும் அரசாணையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
திருவள்ளூரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி (68) கடந்த 2018-ம் ஆண்டு ஆக.6-ம் தேதி தனது கணவர் பழனியுடன் மருத்துவ பரிசோதனைக்காக சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவர்களை அழைத்த ஒரு கும்பல், இப்பகுதியில் வழிப்பறி திருடர்கள் இருப்பதால் அணிந்துள்ள தாலிச்செயின், வளையல், மோதிரம் உள்ளி்ட்ட நகைகளை பத்திரமாக கழட்டி பேக்கில் வைத்துக்கொள்ளுங்கள் என அறிவுரை கூறியுள்ளனர். அவர்களை மாறுவேடத்தில் இருக்கும் போலீஸார் என நினைத்த கிருஷ்ணவேணி தனது 17.5 பவுன் நகைகளை கழட்டி பேக்கில் வைத்த மறுநிமிடம் மற்றொரு கும்பல் அந்த நகைகளை கொள்ளையடித்து தப்பியது.
அதையடுத்து இந்த வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து தனது நகைகளை மீட்க உத்தரவிடக்கோரி கிருஷ்ணவேணி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தட்சிணாமூர்த்தி, இந்த வழக்கில் போலீஸார் கடந்த 7 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடித்து நகைகளை மீட்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை, என குற்றம் சாட்டினார்.
திருவள்ளூர் டவுன் போலீஸார் தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் சி.இ.பிரதாப், ‘‘இந்த வழக்கின் குற்றவாளிகள் யார் என இதுநாள் வரை அடையாளம் காணமுடியவில்லை என்பதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறி திருவள்ளூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை குற்றவாளிகள் யார் என பின்னர் தெரியவந்தால் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும், என்றார்.
அதையடுத்து நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவி்ல் கூறியிருப்பதாவது: மூத்த குடிமக்களை குறிவைத்து இதுபோன்ற திருட்டு, கொள்ளை சம்பவங்கள் கொஞ்சம்கூட ஈவு, இரக்கமற்ற, மனசாட்சியற்ற நபர்கள் மூலமாக அடிக்கடி நடத்தப்படுகின்றன. இந்த வழக்கில் வயதான தம்பதியின் கவனத்தை திசைதிருப்பி 17.5 பவுன் நகைகளை வழிப்பறி செய்துள்ளனர். ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை என போலீஸார் கூறுவது அதிருப்தியளிக்கிறது. போலீஸாரின் இந்த நடவடிக்கை மனுதாரருக்கு துயரத்தைத்தான் அதிகரிக்கும்.
இதுபோல நகை, பணம் போன்றவற்றை பறிகொடுக்கும் வயதான முதியவர்கள் பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, மனதளவிலும் கடுமையான பாதிப்புகளை சந்தித்து நோய்வாய்படுகின்றனர். நூறு ரூபாயை இழந்தாலும் அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த பாதிப்பு முதுமையை விட கொடுமையானது.
அவர்கள் இடத்தில் இருந்து அவர்களின் வலியை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இதுபோன்ற குற்ற வழக்குகளி்ல் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாக ரூ. 1 லட்சத்தை இழப்பீடாக வழங்கும் வகையில் தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. இந்த இழப்பீட்டுத்தொகை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பாக நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.
அதேநேரம் இதுபோன்ற சம்பவங்களில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனக்கூறும்போது தற்போதுள்ள சந்தை மதிப்பின் அடிப்படையில் நகை மற்றும் பணம் போன்றவற்றை பறிகொடுத்தவர்களுக்கு 30 சதவீதம் அல்லது ரூ. 5 லட்சம் இதில் எது குறைவாக உள்ளதோ அதை இழப்பீட்டுத்தொகையாக வழங்க வேண்டும்.
மனுதாரர் பறிகொடுத்த 17.5 பவுன் தங்க நகைகளின் தற்போதைய மதிப்பு ரூ. 13.12 லட்சமாக இருப்பதால் அதில் 30 சதவீதமான ரூ. 4 லட்சத்தை மனுதாரருக்கு 12 வார காலத்துக்குள், முடிந்த வரை உடனடியாக இழப்பீடாக வழங்க வேண்டும். இந்த தொகையை பெற்றுக்கொடுக்கும் வகையில் திருவள்ளூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தன்னார்வலர் ஒருவரை நியமித்து மனுதாரரிடம் விண்ணப்பம் பெற்று அந்த தொகையை வழங்க வேண்டும்.
ஒருவேளை மனுதாரரின் நகை திரும்ப கிடைத்துவிட்டால் இந்த இழப்பீட்டுத் தொகையை அவர் திருப்பி செலுத்த வேண்டும். இந்த சிறிய தொகை மனுதாரருக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யக்கூடியதாக இருக்காது என்றாலும், அவர்களுக்கு மனதளவில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாகவும், சிலநேரங்களில் வாழ்வாதாரத்துக்கான ஆறுதலாகவும் இருக்கும்.
இந்த சமூகம் நம்மை கவனித்துக்கொள்கிறது என்ற நம்பி்க்கையும் அவர்களுக்கு கிடைக்கும். எனவே இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்படும் முதியவர்களுக்கு இழப்பீட்டுத்தொகையை அதிகரித்து வழங்கும் வகையில் தமிழக அரசும் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அரசாணையில் தேவையான திருத்தங்களை மேற்கொண்டு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும், என உத்தரவி்ட்டுள்ளார்.