சென்னை: வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல ஆஜராகாத சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து இன்று ஆஜர்படுத்த சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ரத்தினசபாபதி என்பவர் சென்னை 19-வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் உள்ளிட்ட 4 பேருக்கு எதிராக கடந்த 2019-ம் ஆண்டு முறையான திட்ட அனுமதிபெறாமல் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டுள்ளதாகக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்ற நீதிபதி ராஜ்குமார், இந்த வழக்கில் தேவைப்படும் ஆவணங்களை சமர்ப்பிக்க மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளி்க்க வேண்டு மென சம்மன் பிறப்பித்து கடந்த ஜூன் மாதம் உத்தரவிட்டார்.
ஆனால் அந்த சம்மனை சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் தரப்பில் வாங்க மறுத்து விட்டதாகநீதிமன்ற ஊழியர்கள் தெரிவித்தனர். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க வராத சிஎம்டிஏ உறுப்பினர் செயலரை கைது செய்து இன்று (ஜூலை 18) நேரில் ஆஜர்படுத்த நீதிமன்ற ஊழியர்களுக்கு உத்தரவிட்டு விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்துள்ளார்.