மதுரை: நீதிபதிகளையும், நீதித்துறையையும் விமர்சித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதிக்கு உயர் நீதிமன்ற அமர்வு பரிந்துரை செய்துள்ளது.
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன். இவர் சாதி ரீதியாக நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பியிருந்தார். இந்தப் புகார், வழக்கறிஞர்கள் வாட்ஸ்அப் குழுவில் வைரலானது. இதனிடையே, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நியமனம் தொடர்பான மேல்முறையீடு மனு உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் ஜூலை 25-ல் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேல்முறையீட்டு வழக்கில் 3-வது எதிர்மனுதாரின் வழக்கறிஞரான வாஞ்சிநாதன், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி வாஞ்சிநாதன் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அவரிடம், ‘எங்கள் இரு நீதிபதிகளில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி பாகுபாடுடன் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளீர்கள். அதே நிலைப் பாட்டில் தான் தற்போதும் இருக்கிறீர்களா?’ எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மேல்முறையீட்டு வழக்கில் இருந்து தான் விலகிவிட்டதாகவும், நீதித்துறை மீதான குற்றச்சாட்டு குறித்து எழுத்துபூர்வ உத்தரவு பிறப்பித்தால் பதில் அளிப்பதாகவும் வாஞ்சி நாதன் தெரிவித்தார். இதையடுத்து, இரு நீதிபதிகளில் ஒருவர் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) சாதி ரீதியாக செயல்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 28-க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, மதுரை வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதை கைவிடுமாறு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.ஹரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் உயர் நீதிமன்ற அமர்வுக்கு வேண்டுகோள் விடுத்தனர். வழக்கறிஞர்கள் சங்கங்களும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை கைவிடுமாறு கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், வாஞ்சிநாதன் வழக்கு இன்று நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வாஞ்சிநாதன் நேரில் ஆஜராகி விளக்க அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது, தமிழக முதல்வருக்கு பல்கலைக் கழக வேந்தருக்கான அதிகாரம் வழங்கும் சட்டத்துக்கு தடை கோரிய வழக்கில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நடத்திய விசாரணையை வாஞ்சிநாதன் விமர்சனம் செய்து பேசிய வீடியோ ஒளிபரப்பப்பட்டது. ‘இதில் நீதித் துறையை கடுமையாக விமர்சனம் செய்து கருத்து தெரிவித்துள்ளீர்கள். அதற்கு என்ன பதில் சொல் கிறீர்கள்?’ என வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கேட்டார்.
அதற்கு வாஞ்சிநாதன், ‘நீங்கள் ஏற்கெனவே கேட்டதற்கு பதில் அளித்துள்ளேன். இப்போது நீங்கள் ஒரு வீடியோவை ஒளிபரப்பி, அது குறித்து கேட்கிறீர்கள். வீடியோவில் எப்படி வேண்டுமானாலும் மாற்றம் செய்யலாம், வீடியோவை ஒளிபரப்பி, அதற்கு விளக்கம் கேட்பது முறையல்ல. கேட்பது வழக்குக்கு சம்பந்தம் இல்லாதது. வீடியோ தலைப்புக்கு நான் பொறுப்பல்ல. எழுத்துபூர்வமாக கேட்டால் பதில் அளிக்கிறேன். மேலும், உங்கள் (ஜி.ஆர்.சுவாமிநாதன்) மீது நான் தெரிவித்த புகாரை நீங்களே விசாரிக்க முடியாது’ என்றார்.
அதற்கு நீதிபதி, ‘நாங்கள் தலைமை நீதிபதிக்கு புகார் அனுப்பியது குறித்து விசாரிக்கவில்லை. உங்கள் மீது இதுவரை எந்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீங்கள் வைத்த குற்றச்சாட்டில் தற்போதும் அதே நிலையில் இருக்கிறீர்களா என விளக்கம் கேட்கத்தான் அழைத் தோம். அதுவும் மேல்முறையீட்டு வழக்கில் எதிர்மனுதாரர் ஒருவரின் வழக்கறிஞராக நீங்கள் இருந்ததால் உங்களை அழைத்தோம். அதற்குள் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்ததாக நீங்களும், உங்கள் பின்னால் இருப்பவர்களும் பேசி வருகிறீர்கள்.
நீங்கள் என்னுடைய தீர்ப்பினை விமர்சிப்பதற்கு நூறு சதவீதம் உரிமை உள்ளது. அதற்கு நானே ஆதரவு தெரிவிக்கிறேன். ஆனால், சாதி பாகு பாட்டுடன் தீர்ப்பளிப்பதாக குற்றம்சாட்டுவது என்பது வித்தியாசமானது. அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இதை உங்களுடன் இருக்கும் வழக்கறிஞர்களிடமும், ஓய்வு பெற்ற நீதிபதிகளிடமும் கூறுங்கள். எனது நீதித்துறை செயல்பாட்டில் யாரும் தலையிட முடியாது.
உச்ச நீதிமன்றத்தில் நீங்கள் அளித்திருக்கும் புகாருக்கும், இங்கு நடைபெறும் விசாரணைக்கும் எந்த தொடர்பும் இல்லை. தொடர்ந்து 4 ஆண்டுகளாக நீதித் துறையை, நீதிபதிகளை விமர்சனம் செய்து வருகிறீர்கள்? அதற்கு ஆதாரமாக குறைந்தபட்சம் 50 வீடியோக்களை காட்ட முடியும். சமூக வலைதளங்களில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சாதி ரீதியாக நடந்து கொள்கிறார் எனக் கூறியுள்ளீர்கள். அது உண்மை என்றால் நீதிமன்ற அவமதிப்பு. என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?’ எனக் கேட்டனர்.
அதற்கு வாஞ்சிநாதன், ‘எழுத்துபூர்வமாக உத்தரவிட்டால், பதிலளிக்க தயார்’ என்றார். பின்னர் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்,‘வாய்மொழியாக பதில் அளித்தால் போதும். பதிலளிக்க தயங்குவது ஏன்?’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தமிழக பல்கலைக்கழக வேந்தர் நியமனத்தை முதல்வருக்கு மாற்றி பிறப்பித்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சித்தும், பொது ஊடகங்களில் நீதித் துறையை விமர்சித்தும் பேசியுள்ளார்.
முந்தைய விசாரணையின்போது இது குறித்து விளக்கமளிக்க வாஞ்சிநாதன் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது. அதன்படி அவர் நேரில் ஆஜரானார். அப்போது அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டப்படவில்லை. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கப்படாத நிலையில், இதில் தலைமை நீதிபதி தலையிட வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் கோரியது துரதிஷ்டவசமானது. இன்றும் வாஞ்சிநாதன் உரிய பதில் அளிக்கவில்லை. அவரின் செயல்பாடு நீதிமன்ற அவமதிப்பு என கருதுகிறோம். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க தலைமை நீதிபதி அமர்வுக்கு பரிந்துரைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.