உயர் நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சாதி பாகுபாட்டுடன் நடந்து கொள்வதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு மதுரை வழக்கறிஞர் எஸ்.வாஞ்சிநாதன் புகார் அனுப்பி இருந்தார். இதையடுத்து அவர் மீது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்காக வாஞ்சிநாதன் நாளை (ஜூலை 28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் வாஞ்சிநாதன் மீதான நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வுக்கு உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே.சந்துரு, டி.அரிபரந்தாமன், சி.டி.செல்வம், அக்பர் அலி, பி.கலையரசன், எஸ்.விமலா, கே.கே.சசிதரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக ஓய்வு நீதிபதிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: நீதிபதிகளின் நடத்தை, பாகுபாடு பார்ப்பது அல்லது தவறாக நடந்து கொள்ளுதல் தொடர்பாக புகார் அளிக்கும் வழக்கறிஞர் மீது அதே நீதிபதி நடவடிக்கை எடுக்க முடியாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியுள்ளது.
நீதிபதி தொடர்பாக, யாராவது புகார் அளிக்க விரும்பினால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு நேரடியாக புகார் அனுப்பலாம் எனவும் உச்ச நீதிமன்றமும் கூறியுள்ளது. இவ்வாறு அளிக்கப்படும் புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்பினால், உள் விசாரணைக் குழு (இன்ஹவுஸ் இன்கொயரி) அமைப்பார். உள் விசாரணைக்குழு விசாரணைக்கு பின் புகாரில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால் வாஞ்சிநாதன் புகார் மீது உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், வாஞ்சிநாதன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை எடுப்பது சரியல்ல. எனவே வாஞ்சிநாதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு ஓய்வு நீதிபதிகள் கூறியுள்ளனர்.