கரூர்: வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்ததாக அதிமுகவைச் சேர்ந்த ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடியைச் சேர்ந்த பிரின்ஸ்கிப்ஸன் என்பவர், கரூர் அருகேயுள்ள கோதூரில் 7 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, கரூரைச் சேர்ந்த நிலத்தரகர் ஆர்.எஸ்.ராஜாவிடம் முன்பணமாக ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க காலதாமதம் செய்ததால், நில உரிமையாளர்கள் அந்நிலத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டனர். இதனால் ரூ.96 லட்சத்தை பிரின்ஸ்கிப்ஸனிடம், ஆர்.எஸ்.ராஜா திரும்பக் கொடுத்துள்ளார்.
அதை வாங்க மறுத்த பிரின்ஸ்கிப்ஸன், தனக்கு நிலம்தான் வேண்டும் என்று வலியுறுத்திஉள்ளார். இதையறிந்த கரூர் மாவட்டம் வாங்கலைச் சேர்ந்த கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், அதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளருமான பாலமுருகன்(52), இந்தப் பிரச்சினையை முடித்து தருவதாக ஆர்.எஸ்.ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.
அதை நம்பிய ஆர்.எஸ்.ராஜா, கரூர் நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாதன் மூலமாக ரூ.96 லட்சத்தை கடந்த ஆண்டு நவம்பரில் பாலமுருகனிடம் வழங்கியதாகவும், அதைப் பெற்றுக்கொண்ட பாலமுருகன், அத்தொகையை பிரின்ஸ்கிப்ஸனிடம் வழங்காமல், தானே வைத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதையறிந்த வழக்கறிஞர் ரகுநாதன், பாலமுருகனிடம் ரூ.96 லட்சத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் தர மறுத்து, கொலைமிரட்டல் விடுத்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம், ரகுநாதன் புகார் அளித்தார்.இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாலமுருகனை நேற்று கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாலமுருகன், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.