1989-ல் ஜெயலலிதா முதல்முறையாக தேர்தல் அரசியலில் குதித்து வெற்றி பெற்ற போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் 2011 தொடங்கி கடந்த மூன்று தேர்தல்களாக தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஓபிஎஸ், இப்போது போடி அரசியல் களத்தில் தனிமைப்பட்டு நிற்பதாகச் சொல்கிறார்கள்.
தென்மாவட்டங்களில் தாமரைக்கனி, அப்பாவு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கட்சி பின்புலம் இல்லாத போதும் தங்களது சொந்த செல்வாக்கால் சுயேச்சையாக நின்றே தேர்தல் வெற்றிகளை சுவைத்திருக்கிறார்கள். ஆனால், அதிமுக மற்றும் இரட்டை இலையின் செல்வாக்கில் போடியில் தொடர் வெற்றிகளை குவித்து வந்த ஓபிஎஸ், அதைத் தக்கவைப்பதற்கான எந்த முயற்சிகளையும் எடுக்காததால் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார்.
ஒரு காலத்தில் ஜெயலலிதாவுக்கு அடுத்த நிலையில் கட்சியிலும் ஆட்சியிலும் அதிகாரப் புள்ளியாக இருந்த ஓபிஎஸ், அந்த அதிகாரமெல்லாம் என்றைக்கும் நிலைத்திருக்கும் என நம்பியதாலோ என்னவோ சொந்தத் தொகுதியை தக்கவைப்பதற்கான சிந்தனையே இல்லாமல் இருந்துவிட்டார் என்கிறார்கள் போடி அரசியல்வாதிகள். தனது தொகுதியை தக்கவைப்பதை விட்டுவிட்டு ஜெயலலிதா இறப்புக்குப் பின்னால் அதிமுக-வின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதிலேயே அக்கறையாய் இருந்துவிட்டார் ஓபிஎஸ். இதனால் தனக்கு வாக்களித்த மக்களுக்கும் அவருக்கும் இடையிலான நெருக்கத்தில் இடைவெளி விழுந்துபோனது.
ஒருகட்டத்தில் அதிமுக-வை விட்டு ஒதுக்கப்பட்ட நிலையில், தேனி மாவட்ட அதிமுக-வில் முன்பு அவருக்கு வணக்கம் வைத்து நின்ற பலரும் அவரைப் பின்னுக்குத் தள்ளி கட்சிக்குள் பதவிகளை கைப்பற்றியதுடன் தேர்தலில் ஓபிஎஸ்ஸையே எதிர்த்து போட்டியிட துணியுமளவுக்கு இப்போது தயாராகி விட்டார்கள்.
2024 மக்களவைத் தேர்தலில் தேனியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட நாராயணசாமி, முன்னாள் எம்பி-யான பார்த்திபன் உள்ளிட்ட பலரும் இப்போது ஓபிஎஸ்ஸின் போடி தொகுதியில் போட்டியிட முஸ்தீபு காட்டி வருகிறார்கள். அதேபோல் திமுக தரப்பில் முன்னாள் எம்எல்ஏ-வான லட்சுமணன், போடி நகரச் செயலாளர் புருஷோத்தமன் உள்ளிட்டோர் ஓபிஎஸ்ஸிடம் இருந்து போடியை கைப்பற்றும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் தேர்தலுக்காக இப்படி தயாராகிக் கொண்டிருக்க சிட்டிங் எம்எல்ஏ-வான ஓபிஎஸ் எவ்வித சலனமும் இல்லாமல் இருக்கிறார்.
ஸ்டாலினை சந்தித்துப் பேசியதன் மூலம் ஓபிஎஸ் தனி அணியாகவே திமுக தயவுடன் மீண்டும் போடியில் போட்டியிடலாம் என்ற பேச்சும் இருக்கிறது. ஆனால், போடி தொகுதிக்கு உட்பட்ட தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் ஓபிஎஸ்ஸுக்கும் அதிமுக-வில் இருக்கும் காலம் தொட்டே ஆகாது என்பதை சுட்டிக்காட்டும் போடி தொகுதி அதிமுக-வினர், “அப்புறம் எங்கிட்டு ஓபிஎஸ் ஜெயிக்க?” என்று இப்போதே ஊதிவிடுகிறார்கள். இதையெல்லாம் கணக்குப் போட்டே, மக்களவைத் தொகுதியில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டது போல் சட்டமன்றத் தேர்தலிலும் ராமநாதபுரம் அல்லது விருதுநகர் மாவட்டத்தில் ஏதாவதொரு தொகுதியில் போட்டியிடும் பி பிளானையும் ஓபிஎஸ் தரப்பில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஓபிஸ் விசுவாசிகள், “ஓபிஎஸ்ஸூக்கு போடியில் தனிப்பட்ட செல்வாக்கு இல்லை என்ற தோற்றத்தை அவரைப் பிடிக்காதவர்கள் தான் திட்டமிட்டு பரப்புகிறார்கள். ஆனால், ஓபிஎஸ் காலத்தில்தான் போடி தொகுதியில் அதிகமான கல்வி நிறுவனங்கள் வந்துள்ளது. அரசு ஐடிஐ, அரசு கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் கொண்டு வந்திருக்கிறார்.
கொட்டக்குடி ஆற்றில் தடுப்பணை, போடி நகராட்சிக்கு பிரத்யேக குடிநீர் திட்டம் உள்ளிட்டவையும் அவரது முயற்சியால் வந்தது தான். அதனால் போடியில் அவருக்கான செல்வாக்கு இம்மியளவும் குறையாமல் அப்படியே இருப்பதால் நான்காவது முறையும் அவர் இங்கே ஜெயிப்பார்” என்கிறார்கள்.
ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியதே அரசியல் சறுக்கலாகப் அலசப்படும் நிலையில், ஓபிஎஸ் போடியில் தனது தனித்த செல்வாக்கை எப்படி நிரூபிக்கிறார் என்று பார்க்கலாம்.