சென்னை: சென்னை வளசரவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் நடந்த தீ விபத்தில் குற்றவியல் வழக்கறிஞரும், அவரது மனைவியும் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்தின் போது, முதல் தளத்தில் இருந்து குதித்து அவரது பேரனும், வீட்டு பணிப்பெண்ணும் உயிர் தப்பினர்.
சென்னை வளசரவாக்கம் சவுத்ரி நகர் 4-வது தெருவில் 2 தளம் கொண்ட சொகுசு பங்களா வீடு உள்ளது. இந்த பங்களா வீட்டில் குற்றவியல் வழக்கறிஞரான நடராஜன்(78), அவரது மனைவி தங்கம்(73), மகன் ஸ்ரீராம்(50), மருமகள் ஷியாமலா(45) பேத்தி ஸ்ரேயா(20), பேரன் ஷர்வன்(17) ஆகியோருடன் வசித்து வருகிறார். தங்கம் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே படுத்த படுக்கையாக உள்ளார். ஸ்ரீராம் ஆடிட்டராக பணிப்புரிகிறார்.
நேற்று காலை ஸ்ரீராம், அவரது மனைவி ஷியாமலா, மகள் ஸ்ரேயா ஆகியோருடன் வேலை நிமித்தமாக அடையாறு சென்றிருந்தார். வீட்டில் நடராஜன், அவரது மனைவி தங்கம், பேரன் ஷர்வன், பணிப்பெண் சரஸ்வதி(45) ஆகியோர் மட்டுமே இருந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் வீட்டின் முதல் தளத்தில் நடராஜன், அவரது மனைவி தங்கம், பேரன் ஷர்வன், பணிப்பெண் சரஸ்வதி ஆகியோர் இருந்தனர்.
அப்போது, திடீரென முதல் தளத்தில் அனல் வீசியது. பேரன் ஷர்வன் கதவை திறந்து பார்த்தார். தரை தளத்தில் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து, முதல் தளத்தில் இருந்த ஷர்வனும், பணிப்பெண்ணும் கீழே இறங்கி தப்பிக்க முயற்சித்தனர். ஆனால், பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை கடந்து அவர்களால் கீழே இறங்க முடியவில்லை.

கொழுந்து விட்டு எரிந்த நிலையில்,
தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும்
முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, தீ மளமளவென முதல்தளம் வரத் தொடங்கியது. வீட்டில் இருந்தவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கூச்சலிட்டு கொண்டிருந்தனர். இந்நிலையில், தனது பேரன் மற்றும் பணிப்பெண்ணிடம் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்து உயிரை காப்பாற்றிக் கொள்ளும் படியும், தான் பாட்டியுடன் இங்கேயே இருந்து கொள்வதாகவும் நடராஜன் கூறியுள்ளார்.
இதற்கிடையில், தீ முதல்தளத்திலும் பரவத் தொடங்கியது. உயிர் பிழைத்து கொள்வதற்காக, ஷர்வனும், பணிப்பெண் சரஸ்வதியும் முதல் தளத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் பணிப்பெண்ணுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு வலியில் துடித்தார். பங்களா வீடு தீப்பிடித்து எரிவதை கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விருகம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோயம்பேடு, பூந்தமல்லி, மதுரவாயல் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 5 வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
மேலும், 5 தண்ணீர் லாரிகளும் அங்கு வரவழைக்கப்பட்டன. வீட்டின் 2 தளங்களும் கொழுந்து விட்டு எரிந்ததால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே சென்று வயதான தம்பதியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், தீ தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. பின்னர், 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இதையடுத்து வீட்டின் உள்ளே வீரர்கள் சென்றபோது, அங்கு உடல் கருகிய நிலையில் நடராஜன், தங்கம் ஆகியோர் உயிரிழந்து கிடந்ததை கண்டனர். பின்னர், இருவரது உடலையும் மீட்டு கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், எலும்பு முறிவு ஏற்பட்ட பணிப்பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து ஸ்ரீராமுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீடு திரும்பிய அவர் உயிரிழந்து கிடந்த தாய், தந்தை உடலை பார்த்து கதறி அழுதார்.
வீடு முழுவதும் எரிந்து நாசமானதால் தீ விபத்துக்கான காரணத்தை உடனடியாக போலீஸாரால் கண்டறியமுடியவில்லை. எனவே, தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுடன் சேர்ந்து போலீஸாரும் ஆய்வு செய்தனர். தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸார் தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தீ விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சதி வேலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும், வீட்டின் குடோனில் சமையல் எரிவாயு முழுவதும் நிரம்பிய 6 சிலிண்டர்கள் இருந்ததை கண்டு, அதையும் அங்கிருந்து தீயணைப்பு வீரர்கள் அகற்றினர். இந்த தீவிபத்தில் சிலிண்டர்களும் வெடித்திருந்தால் அப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டிருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். வயதான தம்பதி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் வளசரவாக்கத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.