ஒருபக்கம் அதிமுகவின் கூட்டணி கட்சியான பாஜக, தமிழகத்தில் ‘2026-ல் கூட்டணி ஆட்சிதான்’ என தொடர்ந்து சொல்லிவரும் நிலையில், இப்போது திமுக கூட்டணியிலும் ‘ஆட்சியில் பங்கு’ என்னும் பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது காங்கிரஸ்.
தமிழகத்தில் சமீபத்தில் ‘கூட்டணி ஆட்சி’ முழக்கத்தை பேசுபொருளாக்கியது விசிகதான். விசிகவின் சில தலைவர்கள் ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என முதன்முதலாக அனலை மூட்டினர். விசிக உருவாக்கிய முழக்கத்தை கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய், தவெகவின் முதல் மாநில மாநாட்டில் ‘கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்போம்’ என்று அறிவித்தார்.
விசிக ‘கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்தை தொடக்கத்தில் முன்வைத்தாலும், பின்னர் படிப்படியாக தனது வாய்ஸை குறைத்துக் கொண்டது. ஆனால் அதிமுகவோடு கூட்டணி வைக்கும் கட்சிகள் ‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கையை வலுவாக எழுப்ப ஆரம்பித்தன. சிறிய இடைவேளைக்குப் பின்னர் அதிமுகவோடு கூட்டணி சேர்ந்த பாஜக, தொடர்ந்து கூட்டணி ஆட்சி கோஷத்தை எழுப்பிக்கொண்டே இருக்கிறது.
கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் பேச்சை அதிமுகவினர் தொடக்கம் முதலே ரசிக்கவில்லை. இபிஎஸ் தொடங்கி கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் ‘அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்’ என அடித்துச் சொன்னாலும், பாஜக தனது ‘கூட்டணி ஆட்சி’ கோஷத்தை இப்போது வரை கைவிடவே இல்லை. அதேபோல அன்புமணியும், பாமக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி 2026-ல் அமையும் என மேடைதோறும் பேசி வருகிறார். தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் கூட்டணி ஆட்சி என பேச ஆரம்பித்துவிட்டனர்.
இந்த நிலையில்தான், ‘2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் அமையும். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 பேர் அமைச்சர்களாக இருப்பார்கள்’ என்று காங்கிரஸ் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி பூகம்பத்தை கிளப்பியுள்ளார். இதனை ஆமோதிக்கும் வகையில் செல்வப்பெருந்தகையும் கருத்து தெரிவித்துள்ளது, திமுக அணியிலும் கிலியை கிளப்ப ஆரம்பித்து விட்டது.
தமிழக வரலாற்றில் இதுவரை கூட்டணி ஆட்சி அமைந்ததில்லை. எவ்வளவு பலமான கூட்டணியாக இருந்தாலும், ‘கூட்டணி ஆட்சி’ என்ற முழக்கத்தோடு யாரும் தேர்தலை சந்தித்ததில்லை. தமிழகத்தில் 2006-ல் மட்டும்தான் மைனாரிட்டி அரசு அமைந்தது. அப்போது 96 இடங்களில் மட்டும் வென்ற திமுக, தனது கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் (34), பாமக (18), மார்க்சிஸ்ட் (9), இந்திய கம்யூனிஸ்ட் (6) கட்சிகளின் ஆதரவோடு, ஐந்து வருடமும் நிலையான ஆட்சியை நடத்தியது.
அதற்கு முன்பாகவும் தமிழகத்தில் இருமுறை கூட்டணி ஆட்சி அமையும் சூழல் இருந்தது. 1980-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தது. அப்போது தமிழக காங்கிரஸ் தலைவராக மூப்பனார் இருந்தார். அந்த தேர்தலில் காங்கிரஸ் 114 இடங்களில் போட்டியிட்டது, திமுக அதைவிட குறைவாக 112 இடங்களில் போட்டியிட்டது. ஒருவேளை அப்போது இக்கூட்டணி வென்றிருந்தால் கூட்டணி ஆட்சி அமைந்திருக்கலாம்.
அதேபோல 1996-ல் அதிமுகவை வீழ்த்த புதிதாக தொடங்கப்பட்ட மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், திமுகவோடு கூட்டணி வைத்தது. அப்போது ரஜினியின் ஆதரவும் மூப்பனாருக்கு இருந்தது. ஒருவேளை அப்போது மூப்பனார் நெருக்கடி கொடுத்திருந்தால், ஒருவேளை கூட்டணி ஆட்சி அமைந்திருக்கலாம். இப்படி இக்கட்டான சூழல் அமைந்த போதெல்லாம் கூட தமிழகத்தில் எழும்பாத ‘கூட்டணி ஆட்சி’, ‘ஆட்சியில் பங்கு’ முழக்கங்கள் இப்போது அதிகமாக வெடித்துள்ளது.
இப்போது தாங்கள் வலுவாக இருப்பதாக திமுக முழு நம்பிக்கை கொண்டுள்ளது. ஆனாலும், மறுபக்கம் அதிமுக – பாஜக கூட்டணி முழு பலத்தையும் 2026 தேர்தலில் வெளிப்படுத்த தயாராகி வருகிறது. எனவே காங்கிரஸ், விசிக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சிகள் எழுப்பியுள்ள ‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது. இவ்வளவு நாள் அமைதியாக இருந்த காங்கிரஸ், இப்போது ஏன் கலகத்தை உருவாக்குகிறது என்ற கொந்தளித்து போயிருக்கிறது திமுக தலைமை.
‘காங்கிரஸில் சில தலைவர்கள் என்ன கோரிக்கை வேண்டுமானாலும் வைக்கலாம், கட்சியின் டெல்லி தலைமை எடுப்பதுதான் இறுதி முடிவு. இப்போதைய சூழலில் தேசிய அளவில் காங்கிரஸுக்கு திமுக முக்கியமான கூட்டணி கட்சி. எனவே திமுகவை பகைத்துக்கொள்ள காங்கிரஸ் உயர் தலைமை எப்போதும் விரும்பாது. இதனால், இவர்களின் ‘கூட்டணி ஆட்சி’ கோரிக்கை பெரிதாக எடுபடாது. ஆனாலும், இதன் மூலமாக தொகுதிகளை சற்று அதிகமாக கேட்கலாம்’ என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தேர்தல் நெருக்கத்தில் தங்களின் பேர வலிமையை அதிகமாக்கும் துருப்புச் சீட்டாக ‘கூட்டணி ஆட்சி’ அஸ்திரத்தை வீசிப் பார்க்கின்றன அரசியல் கட்சிகள். இப்போதைக்கு திமுக, அதிமுக கூட்டணிகளில் உள்ள கட்சிகளின் இலக்கு ‘கூட்டணி ஆட்சி லட்சியம் – கூடுதல் தொகுதிகள் நிச்சயம்’ என்பதுதான்.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில், கூட்டணி கணக்குகள் எப்படியும் மாறலாம். ஆனாலும், இப்போதே தமிழகத்தில் பிரளயத்தை பற்றவைத்துள்ளது ‘கூட்டணி ஆட்சி’ முழக்கம்!