சென்னை: வறுமையை ஒழிப்பதில் இதர மாநிலங்களுக்கு எப்போதும் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடுமையான உழைப்பு காரணமாக வறுமை ஒழிப்பில் தமிழகம் இந்தியாவில் முதல் இடம் என்னும் அணிகலனைச் சூடியுள்ளது. இதில், திமுக அரசு தொடங்கிய 1967-ம் ஆண்டு முதல் வறுமை ஒழிப்பை முன்னிலையில் வைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் வரலாறும் அடங்கியுள்ளது.
1974-ம் ஆண்டு ஜன.28-ம் தேதி சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முன்னாள் முதல்வர் மறைந்த கருணாநிதி ஆற்றிய உரையில், குடியரசு நாள் விழா கூட கொண்டாட முடியாத நிலையில் உள்ள குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு உணவு வழங்கி வருகிறோம் என்று குறிப்பிட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, கரோனா பாதிப்பு இருந்த நிலையில் பொதுவிநியோகத் திட்டம் மூலம் அனைவருக்கும் தடையின்றி உணவுப் பொருட்கள் வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி 2022-ல் 2 கோடியே 7 லட்சத்து 70,726 அரிசி குடும்ப அட்டைதாரருக்கு, 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய கரோனா நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டது. 2 கோடியே 8 லட்சத்து 42,716 அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.4,000 வீதம் கரோனா நிவாரண உதவித்தொகை 2 தவணைகளாக வழங்கப்பட்டன.
தமிழகத்தில் 37,328 நியாயவிலைக் கடைகள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் 2 கோடியே 25 லட்சத்து 93,654 மின்னணு குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. தரம் மற்றும் பராமரிப்புக்காக 10,149 நியாய விலைக் கடைகளுக்கும், பாதுகாப்பான உணவுச் சங்கிலி மற்றும் சேமிப்புக்காக 2,059 நியாய விலைக் கடைகளுக்கும் ஐஎஸ்ஓ சான்றிதழ் பெறப்பட்டுள்ளன.
மேலும் 2,394 புதிய நியாயவிலைக் கடைகளை முதல்வர் திறந்து வைத்துள்ளார். இதுவரை 10,661 நியாய விலைக்கடைகளில் யுபிஐ முறையைப் பயன்படுத்தி ரொக்கமில்லாப் பணப்பரிவர்த்தனை நடைபெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணத் தொகையாக ஒரு குடும்பத்துக்கு ரூ.6,000 வீதம் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 24 லட்சத்து 78,229 குடும்பங்களுக்கும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகனமழையால் பாதிக்கப்பட்ட 6 லட்சத்து 36,760 குடும்பங்களுக்கு தலா ரூ.6,000 வீதமும் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள இதர வட்டங்களிலும் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் கனமழையால் பாதிக்கப்பட்ட 14 லட்சத்து 58,164 குடும்பங்களுக்குத் தலா ரூ.1,000 வீதமும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 கிலோ அரிசி பை, 1 கிலோ பருப்பு, 1 கிலோ சர்க்கரை ஆகியவை 7 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
நடப்பாண்டு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு 1 கோடியே 94 லட்சத்து 35,771 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.