மதுரை: மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு வழக்கில் மேயரின் கணவரின் ஜாமீன் மனு விசாரணை செப். 10-க்கு தள்ளிவைக்கப்பட்டது.
மாநகராட்சி வரி முறைகேடு வழக்கில் மேயர் இந்திராணி கணவர் பொன் வசந்த் உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் முகமதுநூர் உட்பட 7 பேருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ஜாமீன் வழங்கியுள்ளது. இந்நிலையில் பொன் வசந்த், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஜாமீன் கோரி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் மாவட்ட நீதிபதி எஸ்.சிவகடாட்சம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பழனிசாமி வாதிடுகையில், பில் கலெக்டர் ரவிச்சந்திரன் தனிப்பட்ட ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டு, கம்ப்யூட்டர் பாஸ்வேர்டை தவறாக பயன்படுத்தி 33 வரி பதிவுகளை திருத்தம் செய்துள்ளார்.
பொன் வசந்த் தனது செல்வாக்கை பயன்படுத்தி பல வணிக கட்டிடங்களுக்கான வரியை குறைத்துள்ளார். காளவாசல் பகுதியில் உள்ள வணிக வளாகத்திற்கு வரி குறைப்பு செய்ய ரூ.10 லட்சம் வரை பெற்றுள்ளார். எனவே, இருவருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்றார். இதையடுத்து ரவிச்சந்திரன் மனு மீதான விசாரணையை செப்.9-க்கும், பொன் வசந்தின் மனுவை செப்.10-க்கும் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.