சென்னை: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு பெற, சிறை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்யவும் தயாராகவே இருக்கிறோம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தொண்டர்களுக்கு அவர் நேற்று எழுதிய கடிதம்: கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீததனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடவே, கடந்த 1980-ல் வன்னியர் சங்கத்தை ராமதாஸ் தொடங்கினார்.
பின்னர் 7 ஆண்டுகள் போராடியும் எதுவும் நடக்காத நிலையில், 1987-ல் பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி சாலை மறியல் போராட்டம் தொடங்கியது. அந்த ஒரு வார தொடர் போராட்டத்தில் காவல் துறை நடத்திய தடியடி தாக்குதலிலும், உடலில் குண்டுகள் பாய்ந்தும் 21 பாட்டாளிகள் உயிர்த் தியாகம் செய்தனர்.
நமது சமூகநீதி நாளான செப்டம்பர் 17-ம் தேதி இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளின் படங்கள், நினைவு தூண்களுக்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் மரியாதை செலுத்த வேண்டும். அனைவரும் தங்கள் வீடு முன்பு ‘வன்னியர் இடஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளுக்கு வீரவணக்கம்’ என்ற பதாகையை அமைத்து மரியாதை செலுத்த வேண்டும்.
நமக்கான உரிமைகள் எளிதாக கிடைத்துவிடவில்லை. கடும் போராட்டங்கள், தியாகங்கள் மூலமாகவே உரிமைகளை பெற்றுள்ளோம். இன்றைய நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு என்பதே சமூக அநீதிதான். 15 சதவீத இடஒதுக்கீடு என்பதே உண்மையான சமூகநீதியாக அமையும். அதை பெற, சிறைகளை நிரப்புவது உட்பட எத்தகைய அறப்போராட்டங்கள், தியாகங்களை செய்ய தயாராகவே இருக்கிறோம். அதுவே லட்சியம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.