விழுப்புரம்: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி நடந்த போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 21 தியாகிகளுக்கு ஆண்டுதோறும் செப். 17-ம் தேதி வன்னியர் சங்கம் மற்றும் பாமக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது ராமதாஸ்-அன்புமணி இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இருவரும் தங்கள் பலத்தை நிரூபிக்க பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பெரியார் பிறந்த நாளையொட்டி தைலாபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு நேற்று மாலை அணிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், பின்னர் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, பல ஆண்டுகளுக்கு பிறகு, சித்தணி முதல் கொள்ளுகாரன்குட்டை வரையுள்ள தியாகிகளின் நினைவு தூண்களுக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது தியாகிகளின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். அவருடன், அவரது மகள் காந்தி உள்ளிட்டோர் சென்றனர். இதேபோல, திண்டிவனத்தில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, 21 தியாகிகளின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும், சித்தணி முதல் கொள்ளுக்காரன்குட்டை வரையுள்ள தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கு சென்று, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவர்களது குடும்பங்களுக்கு நிவா ரண உதவிகளை வழங்கினார்.
ராமதாஸ், அன்புமணி ஆகியோர் பரபஸ்பர பலத்தை நிரூபிக்கும் வகையில் தனித்தனியாக 100 கார்களிலும் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களிலும் தொண்டர்கள் சென்றனர். இதனால் விக்கிரவாண்டி-பண்ருட்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் விழுப்புரம் நான்குமுனை சந்திப்பு முதல் கோலியனூர் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. புறவழிச்சாலை வழியாக கனரக வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.