“செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார்” என்று கரூர் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாயாரப் புகழ்ந்திருக்கும் நிலையில், “மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்கள் தங்களைத்தான் வளப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் எங்களைத்தான் பிழிந்து எடுக்கிறார்கள்” என்று திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் சத்தமாகவே புலம்பித் தள்ளி இருக்கிறார்.
விருத்தாசலம் தொகுதி தேமுதிக முன்னாள் எம்எல்ஏ-வான பி.வி.பி.முத்துக்குமார் 2017-ல் திமுக-வில் இணைந்தார். உடனடியாகவே அவருக்கு கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் அன்பில் மகேஸின் கல்லூரி தோழர் என்ற வகையில் மாநில பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் பதவியும் முத்துக்குமாருக்கு சாத்தியமானது. இப்போது இவர், அமைச்சர் பெயரைச் சொல்லி தனக்கான அனைத்தையும் எளிதில் சாதித்து வருகிறார்.
இதேபோல், 2016-ல் விருத்தாசலத்தில் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆன வி.டி.கலைச்செல்வன், 2021-ல் மீண்டும் அங்கே சீட் கிடைக்காததால் 2023-ல் திமுக-வில் கலந்தார். அவர் தான் இப்போது மாநில திமுக இலக்கிய அணி துணைச் செயலாளர். திமுக-வில் இணைந்த கையோடு அமைச்சர் சி.வெ.கணேசனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு முன்னேறிய கலைச்செல்வன், இப்போது அமைச்சர் நேருவுக்கும் அவரது மகனுக்கும் மிக நெருக்கமானவராக இருக்கிறார். இம்முறை அவர் விருத்தாசலம் சீட்டை வாங்கினாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.
இந்த நிலையில், நெய்வேலியில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் அண்மையில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான சி.வெ.கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் தான், நல்லூர் ஒன்றிய திமுக செயலாளர் பாவாடை கோவிந்தசாமி தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
“நாங்கள் காலங்காலமாக கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறோம். மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்கள் எவ்வித கட்சிப் பணியும் பார்ப்பதில்லை. அமைச்சர்கள் நிகழ்ச்சி, கட்சித் தலைவர் நிகழ்ச்சிக்கு மட்டும் வந்து தலையைக் காட்டிவிட்டுச் சென்று விடுகின்றனர். ஆனால், எங்களைவிட அவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்து மேடையில் அமரவைத்து அழகு பார்க்கிறீர்கள்.
அதுமட்டுமா… கட்சியிலும் முக்கியப் பதவி, நல்ல வருமானம் ஈட்டும் வகையிலான அரசு சார்பு பதவிகளை வழங்கி வளர்க்கிறீர்கள். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி கேட்பதற்கு வேண்டுமானால் காது குளிரும். நடைமுறையில் கட்சிக்காரனை விரக்தியின் விளிம்புக்குத் தான் தள்ளும் என்பதை உணருங்கள்” என பாவாடை கோவிந்தசாமி கொட்டித் தீர்த்ததை ஆமோதிப்பது போல் அரங்கம் அதிர்ந்தது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய பாவாடை கோவிந்தசாமி, “ஆளும் கட்சியாக இருக்கும் போது தான் ஏதோ நான்கு ஆப்ளிகேஷன்களை முடித்துக் கொடுத்து ஏதாவது பார்க்கமுடியும். அரசு அலுவலர்களின் பணியிட மாற்றம், நியமனம் போன்றவை எல்லாம் இப்போது கவுன்சலிங், தேர்வு என ஆகிவிட்டதால் அதிலெல்லாம் கட்சிக்காரனுக்கு இப்போது எந்த வருமானமும் இல்லாமல் போய்விட்டது.
அப்படி இருக்கையில், எங்களைப் போன்றவர்களை மாவட்டச் செயலாளர்களும் மந்திரிகளாக இருப்பவர்களும் தான் கவனிக்க வேண்டும். ஆனால் அவர்களோ, புதிதாக கட்சிக்கு வந்தவர்களைத்தான் முன்னிலைப்படுத்துகிறார்கள். அதேசமயம், அவர்களிடம் கட்சிப் பணிகள் குறித்து எதுவும் கேட்பது கிடையாது. அதை மட்டும் எங்களிடம் தான் கேட்கிறார்கள்.
மொத்தத்தில், இப்போது எந்த ஒன்றியச் செயலாளரும் திருப்தியாய் இல்லை. அப்படி இருக்கையில் அவர்களை கசக்கிப் பிழிந்து வேலை வாங்கும் மாவட்டச் செயலாளர்கள், அதற்கான செலவுகளுக்காக கிள்ளிக்கூட கொடுப்பதில்லை. அனைத்தையும் அவர்களே வாங்கிக் கொண்டால் நாங்கள் எப்படி கட்சிப் பணி செய்வது? இந்த ஆதங்கத்தைத்தான் செயற்குழுக் கூட்டத்தில் பேசினேன்” என்றார்.
இதுகுறித்து விருத்தாசலம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளரான வேல்முருகன் நம்மிடம் பேசுகையில், “பாவாடை கோவிந்தசாமி கோபப்படுவதில் தவறில்லை. 2016-ல் வி.டி.கலைச்செல்வனிடம் தோல்வியடைந்த விரக்தியில் அவர் அப்படிப் பேசுகிறார். அதற்காக மாற்றுக் கட்சியில் இருந்து நம் கட்சிக்கு வந்தவர்களை புறந்தள்ளவா முடியம்? நல்லதோ கெட்டதோ அனுசரித்துத்தான் செல்லவேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்லவேண்டும் என்று முதல்வரே கூறும்போது நாமும் போகவேண்டியது தான்” என்றார்.