சென்னை: கண்டிகை ஏரியை முறையாக அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவி்ட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த பி.பாஸ்கர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது: வண்டலூர் அருகே உள்ள கண்டிகை ஏரி 11.4 ஏக்கர் பரப்பு கொண்டது. இந்த ஏரியில் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது 5 ஏக்கர் மட்டுமே நீர்நிலையாக உள்ளது. அரசியல் செல்வாக்குமிக்க நபர்கள் நீர்நிலையை தாங்கல் புறம்போக்கு எனக்கூறி பட்டா பெற்று வருகின்றனர்.
ஏற்கெனவே இந்த ஏரியை முழுமையாக அளவீடு செய்து, நீர்நிலையை மீட்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நீர்நிலையை மீட்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.ஜெகந்நாத் ஆஜராகி, தொன்மையான இந்த கண்டிகை ஏரியை நம்பித்தான் அப்பகுதியில் விவசாய பணிகளும், குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த ஏரி தற்போது முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு, சுற்றுவட்டார பகுதிகளின் கழிவுநீர் மையமாக மாறி வருகிறது.
ஏரியை சுற்றி நூற்றுக்கணக்கான வீடுகள் ஆக்கிரமிப்பில் உள்ளன என்றார். அதையடுத்து நீதிபதிகள், கண்டிகை ஏரியை முறையாக அளவீடு செய்து அதில் உள்ள ஆக்கிரமிப்புகளை 3 மாதங்களில் அகற்றி அதுதொடர்பான விவரங்களை அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பாக மனுதாரருக்கும் தகவல் தெரிவி்க்க வேண்டும், என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.