சென்னை: வட சென்னை மற்றும் அதை ஒட்டிய திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் நேற்று அதிகாலை விடிய விடிய பலத்த இடி, மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. சென்னை, புறநகரில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் நிலவி வந்தது. இரவு நேரங்களில் கடும் புழுக்கம் நிலவியது. நேற்று முன்தினமும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை நேரத்தில் லேசான தூரல் நிலவியது.
பின்னர் மாலை, இரவில் புழுக்கமான சூழல் நிலவியது. இந்நிலையில், நேற்று அதிகாலை பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. காலை 6 மணிக்கு மேலும் மழை நீடித்தது. இதனால் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கியது.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் பலர் சிரமத்துக்குள்ளாவது தவிர்க்கப்பட்டது. நேற்று காலை 8.30 மணிவரை பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பாரிமுனையில் 11 செமீ, கொளத்தூர், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தலா 9 செமீ, பொன்னேரியில் 8 செமீ, சென்னை பெரம்பூர், வில்லிவாக்கத்தில் தலா 7 செமீ, தண்டையார்பேட்டை, ஆட்சியர் அலுவலகம், விம்கோ நகர், கொரட்டூர், காசிமேடு, திருவள்ளூர் மாவட்டம் சோழவரம், கும்மிடிப்பூண்டியில் தலா 6 செமீ, மணலியில் 5 செமீ, அயனாவரம், மணலி புதுநகர், அண்ணாநகர் மேற்கு, திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் தலா 4 செமீ, அம்பத்தூர், கத்திவாக்கத்தில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இந்த கனமழையால் சுரங்கப்பாதைகளில் எங்கும் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.