சென்னை: வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பணிமனை வளர்ச்சி திட்டம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக, ரூ.481.3 கோடியில் ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் தமிழக தொழில் துறை மேம்பாட்டு கழகம் இணைந்து உருவாக்கிய சிறப்பு நிறுவனமான சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில், வடபழனியில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மற்றும் வணிக வளாகத்துடன் கூடிய `வடபழனி பேருந்து பணிமனை வளர்ச்சி திட்டம்’ மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் ரூ.481.3 கோடியில் வெளியிடப்பட்டுள்ளது.
இத்திட்டம், சென்னையின் மிகவும் பரபரப்பான போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றான ஆற்காடு சாலையில் 6.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வடபழனி பேருந்து பணிமனை இடத்தில் உருவாக்கப்படும். இந்த வளர்ச்சி திட்டம், அதிக தேவை கொண்ட நகர்ப்புற மையத்தை உலகத்தரம் வாய்ந்த, பல்நோக்கு வசதி கொண்டதாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீரான போக்குவரத்து இயக்கம், 2,801 சதுர மீட்டர் திறந்தவெளி ஒதுக்கீடு மற்றும் 2,304 சதுர மீட்டர் பூங்கா/தோட்டம் ஆகியவற்றை கொண்டுள்ளது.
திட்டத்தின் முக்கிய சிறப்பம்சங்கள்: தரை தளத்தில் அமைக்கப்படும் நவீன பேருந்து நிலையத்தில் 5 ஏறும் இடங்கள், 2 இறங்கும் இடங்கள், நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளன. மொத்த கட்டுமானப் பரப்பளவு 1,06,762 சதுர மீட்டர்கள் ஆகும். இரு அடித்தளங்களில் 1,475-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 214 நான்கு சக்கர வாகனங்களுக்கான நிறுத்துமிட வசதி வழங்கப்படும். முதல் தளத்திலிருந்து 10-வது தளம் வரை அலுவலக இடங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதில் பெருநிறுவன அலுவலகங்கள், வரவேற்பு ஓய்வறைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கான பிரத்யேக இடங்கள் அமையவுள்ளன. பயணிகள், பணியாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக ஒரு பிரத்யேக உணவு மையம் மற்றும் உணவகங்கள் 5-வது தளத்தில் திட்டமிடப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை நிலையங்கள் தரை தளத்தில் அமைந்திருக்கும். மாடியில் பசுமையான தோட்டம் மற்றும் சூரிய ஒளி மின்கல அமைப்புகள் (solar panels) அமைக்கப்படும். இத்தகவல் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.