சென்னை: தொழிலதிபருக்கு எதிரான வங்கிக் கடன் வழக்கு விசாரணையை ஓராண்டில் முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், வழக்கில் குற்றம்சாட்டப்படாத நிலையில், வெளிநாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது என கருத்து தெரிவித்துள்ளது.
தொழிலதிபர் சிவசங்கரன் இந்தியாவில் ஐடிபிஐ வங்கியில் 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்றார். அந்த பணத்தை சட்டவிரோதமாக பிரிட்டிஷ் வெர்ஜின் தீவில் உள்ள நிறுவனத்துக்கு பரிமாற்றம் செய்துள்ளார். மேலும், வங்கியில் பெற்ற கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தொழிலதிபர் சிவசங்கரனுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மோசடி தொடர்பாக சிபிஐ மேல் விசாரணையும் நடத்தி வருகிறது. அதன்படி, செஷல்ஸ் நாட்டின் குடிமகனான கார்த்திக் பார்த்திபன் என்பவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி, கார்த்திக் பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு இன்று (ஜூன் 10) விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வின் குமார், “இந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவராக மனுதாரர் சேர்க்கப்படாத நிலையில் வெளிநாடு செல்ல அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இது அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது,” என வாதிடப்பட்டது.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சீனிவாசன், “500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இந்நிலையில், மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்தால் அவர் தப்பிவிடக் கூடும். அவரை இந்தியாவுக்கு கொண்டு வர, செஷல்ஸ் நாட்டுடன் இந்தியா எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை. எனவே, மனுதாரருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்யக்கூடாது.” என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படாத நிலையில், அந்நிய நாட்டுக் குடிமகனை காலவரம்பின்றி தடுத்து வைக்க முடியாது. அவருக்கு எதிரான வழக்கில் ஓராண்டில் புலன் விசாரணையை முடிக்க வேண்டும் என சிபிஐ-க்கு, நீதிபதி உத்தரவிட்டார். விசாரணை முடிவில், மனுதாரருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இல்லை என தெரியவந்தால், அவருக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும். குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரம் இருந்தால் லுக் அவுட் நோட்டீஸை நிலுவையில் வைத்து, வழக்கை எதிர்கொள்ள செய்ய வேண்டும்.” என்றார்.
மேலும், மலேசியாவில் நடக்கும் சகோதரர் திருமணத்தில் கலந்து கொள்ள மனுதாரருக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.