சென்னை: முதலீடுகளை ஈர்க்க ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், லண்டன் நகரில் அமைந்துள்ள கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்துக்கு சென்று பார்வையிட்டார். அங்கு திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “லண்டன் கீழைத்தேயவியல் மற்றும் ஆப்பிரிக்கவியல் பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தி, எக்காலத்துக்குமான தமிழ் பண்பாட்டின், அறிவுக்கருவூலமாகத் திகழும் திருக்குறளை போற்றினேன். அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகளுடன் திமுகவின் ஆட்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இளைஞர்களின் ஆற்றல் குறித்து உரையாடி, மனதுக்கு நெருக்கமான கருத்துகளை பகிர்ந்து கொண்டேன்.
இதையடுத்து இந்திய அரசியமைப்பு சட்டத்தின் 75 ஆண்டுகளையொட்டி அதன் மக்களாட்சி மரபையும், தற்காலப் பொருத்தப்பாடினையும் குறித்து நடைபெற்று வரும் பிஏசிடி கண்காட்சியையும் பார்வையிட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மேதை ஜி.யு.போப் கல்லறையில் மரியாதை செலுத்தினார். அப்போது அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில், ‘ஆக்ஸ்போர்டடு சென்று விட்டு அங்கு உறங்கும் தமிழ் மாணவரை போற்றாமல் வருவது அறமாகுமோ?’ என தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து, முதல்வர் மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘தத்துவஞானிகள் இதுவரை உலகைப் பல வகைகளில் விளக்கியுள்ளனர்; ஆனால் உழைக்கும் வர்க்கத்துக்கு ஒளி வழங்கிய சிவப்புச் சூரியனாம் மாமேதை கார்ல் மார்க்ஸ் நினைவிடத்தில் செவ்வணக்கம் செலுத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.
மேலும், அண்ணல் அம்பேத்கர் லண்டனில் படிக்கும்போது தங்கியிருந்த இல்லத்தை பார்வையிட்டார். அதுகுறித்து அவர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், “பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் லண்டன் பொருளியல் பள்ளியில் (LSE) படிக்கும்போது, தங்கியிருந்த டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் இல்லத்தைப் பார்வையிடும் வாய்ப்பைப் பெற்றேன். அந்த இல்லத்தின் அறைகளினூடே நடந்து செல்கையில் பெரும் வியப்பு என்னுள் மேலோங்கியது.
இந்தியாவில் சாதியின் பேரால் ஒடுக்கப்பட்ட ஓர் இளைஞன், இங்குதான் தனது அறிவால் வளர்ந்து, லண்டனில் அனைவரது மரியாதையையும் பெற்று, பின்னர் இந்தியாவின் அரசியலமைப்பையே வடித்துத் தரும் நிலைக்கு உயர்ந்தார். குறிப்பாக, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் உரையாடும் வரலாற்றுச் சிறப்புமிக்க புகைப்படத்தை அங்கு கண்டது மிகவும் சிலிர்ப்பூட்டியது. இப்படியொரு உணர்வெழுச்சி மிகுந்த தருணம் வாய்க்கப் பெற்றதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.