சென்னை: ஒவ்வொருவரையும் தொழில்முனைவோராக உருவாக்கும் பணியை ரெப்கோ நுண்கடன் நிறுவனம் செய்து வருவது பாராட்டுக்குரியது என, கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.கீதாலஷ்மி கூறினார்.
ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் 15-வது ஆண்டு விழா சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் வரவேற்புரை ஆற்றுகையில், “ரெப்கோ நுண்கடன் நிறுவனம் கடந்த 2010-ம் ஆண்டு நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் தனது முதல் கிளையை தொடங்கி, தற்போது 130 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் 12 லட்சம் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. மகளிர் மேம்பாட்டுக்காக இந்நிறுவனம் பணியாற்றி வருகிறது” என்றார்.
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் தலைவர் சி.தங்கராஜு தலைமை விருந்தினராக பங்கேற்று பேசும்போது, “இந்தியாவில் தற்போது ஆயிரம் ஆண்களுக்கு 1,200 பெண்கள் உள்ளனர். அதாவது சுமார் 70 கோடி பெண்கள் உள்ளனர். இந்தியா வல்லரசாகும் கனவை நனவாக்க பெண்கள் தொழில்முனைவோராக மாறி தங்களது குடும்பத்தை உயர்த்துவதோடு, நாட்டையும் உயர்த்த வேண்டும்” என்றார்.
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வி.கீதாலஷ்மி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது: தற்போது, சர்வதேச பொருளாதாரத்தில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் 3.8 டிரில்லியன் டாலராகும். இந்தியாவை விட அமெரிக்க பொருளாதாரம் 10 மடங்கு அதிகம். அமெரிக்காவை, இந்தியா விஞ்ச வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உள்ளது. இதை எளிதாக அடையலாம். இதற்கு ஒவ்வொருவரும் உற்பத்தி நபராக ஆக வேண்டும்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 2.8 சதவீதமாகும். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதத்துக்கு மேல் உள்ளது. இன்றைக்கு விண்வெளியிலிருந்து வயல்வெளி வரை பெண்கள் முன்னேறி வருகின்றனர். அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். ஒவ்வொருவரையும் தொழில்முனைவோராக உருவாக்கும் பணியை ரெப்கோ நுண்கடன் நிறுவனம் செய்துவருவது பாராட்டுக்குரியது. இவ்வாறு கீதாலஷ்மி கூறினார்.
விழாவில், ரெப்கோ வங்கியின் தலைவர் இ.சந்தானம் பேசும்போது, “மக்களுக்கு சேவையாற்றுவதில் ரெப்கோ நுண்கடன் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, பெண்கள் முன்னேற்றத்துக்காக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகிறது. இந்த வருடம் தாயகம் திரும்பிய மக்களுக்காக, ரெப்கோ வங்கியின் அறக்கட்டளை சார்பில் ரூ.14.50 கோடி நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளன. வரும் ஆண்டு ரூ.25 கோடியாக இலக்கு நிர்ணயித்துள்ளோம்” என்றார்.
முன்னதாக, விழாவில் `ரெப்கோ 15 பிளஸ்’ என்ற தனிநபர் தொழில்முனைவு கடன் திட்டம், வாடிக்கையாளர் கடனை திருப்பிச் செலுத்துவதற்கான மின்னணு செயலி (டிஜிட்டல் ஆப்) ஆகியவை தொடங்கி வைக்கப்பட்டன. மேலும், சிறப்பாக பணியாற்றிய 50 ஊழியர்களுக்கு நினைவுப் பரிசும், 10 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு விருதும் வழங்கப்பட்டன.
இவ்விழாவில், ரெப்கோ வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஓ.எம்.கோகுல், ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டி.கருணாகரன், இயக்குநர்கள் எஸ்.நாகூர் அலி ஜின்னா, எஸ்.இன்னாசி, ஆர்.பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.