சென்னை: சென்னையில் ரூ.80 கோடியில் பல்வேறு வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார். அங்கு முதல் நிகழ்ச்சியாக, மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்.
முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்துக்கு வந்தார். வளாகத்தின் முன்பு நிறுவப்பட்டுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த முதல்வர், உள்ளே சென்று பார்வையிட்டார். முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் இருந்த வள்ளுவர் கோட்டம் ரூ.80 கோடியில் சீரமைக்கப்படும் என்று அறிவித்து, நிதி ஒதுக்கினார்.
இதை தொடர்ந்து, தமிழ் பண்பாட்டு, இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு ஏற்ற வகையில் 20 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 1,548 இருக்கைகளுடன் ‘அய்யன் வள்ளுவர் கலையரங்கம்’ மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன், குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான அரங்கமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உரையுடன் 1,330 திருக்குறள் கொண்ட குறள் பலகைகள், ஓவியங்களுடன் ‘குறள் மணிமாடம்’, 100 பேர் அமரும் வசதியுடன் திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி நூலகம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இதுமட்டுமின்றி, 27 ஆயிரம் சதுரஅடியில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்தும் பார்க்கிங் வசதி, 3,336 சதுரஅடியில் உணவகம், நினைவுப் பொருள், பரிசுப் பொருள் விற்பனையகம், ஒலி – ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் கல் தேர், இசை நீரூற்றுகள் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், பல்வேறு கூடுதல் வசதிகளுடன் கண்ணை கவரும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
புதுப்பித்து திறக்கப்படும் வள்ளுவர் கோட்டத்தில் முதல் நிகழ்ச்சியாக இன்று மாலை, முதல்வர் ஸ்டாலினுக்கு மாற்றுத் திறனாளிகள் சார்பில் நடத்தப்படும் பாராட்டு விழா நடைபெற உள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளை உறுப்பினர்களாக நியமிக்க சமீபத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தது மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு இந்த பாராட்டு விழா நடத்தப்படுகிறது.