சென்னை: மநீம தலைவர் கமல்ஹாசனின் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின்படி, அவரின் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும், அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும், கடன் மதிப்பு ரூ.49.67 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த திமுக மாநிலங்களவை எம்பிக்கள் எம்.சண்முகம், முகமது அப்துல்லா, பி.வில்சன், பாமக எம்.பி அன்புமணி, அதிமுக எம்.பி சந்திரசேகரன், மதிமுக எம்.பி வைகோ ஆகியோரின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனையடுத்து தமிழகத்தில் இருந்து 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்ய ஜூன் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் ஜூன் 2-ம் தேதி தொடங்கியது.
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும் நான்கு இடங்களில், மூன்று இடங்கள் திமுக வேட்பாளர்களுக்கும், ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்துக்கு ஒரு இடமும் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன்படி, தலைமைச் செயலகத்தில் நேற்று (ஜூன் 6) மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது வேட்புமனுவை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், வேட்புமனுவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின்படி, கமல்ஹாசனின் சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய் ரூ.78.90 கோடி எனவும், அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.69 கோடி என்றும், ஒட்டுமொத்த அசையா சொத்துகளின் இப்போதைய சந்தை மதிப்பு ரூ.245.86 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அவருக்கு கடனாக ரூ.49.67 கோடி உள்ளதாகவும், கையிருப்பில் உள்ள ரொக்கம் ரூ.2.60 லட்சம் எனவும், மகேந்திரா பொலிரோ, மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லெக்ஸஸ் ஆகிய நான்கு கார்களின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ.8.43 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.