சென்னை: தமிழகத்தில் உள்ள 3,873 பொது நூலகங்களுக்கு ரூ.40 கோடியில் புத்தகங்களை கொள்முதல் செய்வதற்கான ஆணை வெளியிடப்பட்டுள்ளது. வெளிப்படையான முறையில் நூல்கள் கொள்முதல் செய்யப்படுவது நூலகர்கள், வாசகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பொது நூலகத் துறையின்கீழ் மாநில நூலகம், மாவட்ட மைய நூலகங்கள், கிளை நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள் என 4,500-க்கும் மேற்பட்ட நூலகங்கள் இயங்கி வருகின்றன. கடந்த காலங்களில் நூலகங்களுக்கான புத்தகங்கள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
இதையடுத்து பொது நூலகங்களுக்கு நூல்கள் கொள்முதல் செய்வதில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்கான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சட்டப் பேரவையில் கடந்தாண்டு வெளியிட்டார்.
அதைத்தொடர்ந்து வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை – 2024 உருவாக்கப்பட்டது. அதன்படி நூலகங்களுக்கு தேவைப்படும் புத்தகங்கள், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ்களை வெளிப்படைத் தன்மையுடன் கொள்முதல் செய்யும் வகையில் பிரத்யேக இணையதளம் ( ஏற்படுத்தப்பட்டது. இந்த தளத்தின் வழியாக விண்ணப்பித்த 414 பதிப்பாளர்களின் புத்தகங்கள், நூல் தேர்வுக் குழுவின் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அவற்றில் தகுதியான நூல்கள் தேர்வு செய்யப்பட்டு பதிப்பாளர்களிடம் நூல் விலைக் குறைப்பு பேச்சுவார்த்தை இணையவழியில் நடத்தப்பட்டது. இறுதியாக தேர்வு செய்யப்பட்ட நூல்களின் பட்டியல் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டன. அதிலிருந்து நூலகங்களுக்கு தேவையான புத்தகங்களை அந்தந்த வாசகர் வட்ட உறுப்பினர்கள் மற்றும் நூலகர்களே தேர்வு செய்தனர். இதன்மூலம் தரமற்ற புத்தகங்கள் நூலகங்களுக்கு கொள்முதல் செய்வது தடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், தற்போது ரூ.40 கோடியில் 6,416 தலைப்பிலான புத்தகங்களின் 22 லட்சத்து 17,379 பிரதிகளுக்கு கொள்முதல் ஆணைகள் சமீபத்தில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்குள் பதிப்பாளர்களிடம் இருந்து அனைத்து புத்தகங்களும் கொள்முதல் செய்யப்பட்டு சென்னையில் உள்ள கிடங்குகளில் இருப்பு வைக்கப்படும். அங்கிருந்து மாவட்ட வாரியாக உள்ள பொது நூலகங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும்.
இதன்மூலம் அனைத்து வாசகர்களும் தங்களது இல்லங்களுக்கு அருகில் உள்ள அரசு நூலகங்களில் விரைவில் புதிய புத்தகங்களை வாசித்து பயனடையலாம் என்று நூலகத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.