சென்னை: மாநகராட்சி சார்பில், ரூ.30 கோடியில் விருகம்பாக்கம் கால்வாய் சீரமைப்பு பணிகளை துணை முதல்வர் உதயநிதி நேற்று தொடங்கி வைத்தார். விருகம்பாக்கம் கால்வாய் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாய் ஆகியவற்றை பராமரிக்கும் உரிமையை, நீர்வள ஆதாரத் துறையிடமிருந்து சென்னை மாநகராட்சி பெற்றுள்ளது.
அதன்படி, விருகம்பாக்கம் கால்வாயை சீரமைக்கவும், அதன் வெள்ள நீர் மேலாண்மையை மேம்படுத்தவும், அதை கூவம் ஆற்றுடன் இணைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, விருகம்பாக்கம் கால்வாயை ரூ.30 கோடியில் மாநகராட்சி சார்பில், சீரமைக்கும் பணிகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்வர் உதயநிதி பங்கேற்று, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில், கால்வாய் தூர்வாரும் பணிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ், கால்வாயில் தூர்வாருதல், தடுப்புச் சுவர்களை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இப்பணிகள் மூலம் வளசரவாக்கம் மண்டலத்தில் புவனேஸ்வரி நகர் உள்ளிட்ட பகுதிகள், கோடம்பாக்கம் மண்டலத்தில் சின்மயா நகர், திருநகர் உள்ளிட்ட பகுதிகள், அண்ணாநகர் மண்டலத்தில் திருக்குமரன் நகர், அன்னை சத்யா நகர், காமராஜர் நகர், கலெக்டர் காலனி உள்ளிட்ட பகுதிகள், தேனாம்பேட்டை மண்டலத்தில் திருவள்ளுவர்புரம், கில் நகர் உள்ளிட்ட பகுதிகள் பயன்பெற உள்ளன.
இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் டி.ஜி.வினய், நிலைக்குழு தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.