சென்னை: சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் சென்னை – கன்னியாகுமரி தொழில் தடத் திட்டத்தின் நிதி கூறுகளின் கீழ், நெடுஞ்சாலைத் துறையின் திறன் மேம்பாட்டின் ஒரு பகுதியாக சென்னை கிண்டியில், ரூ.29 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு கட்டிடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்து பார்வையிட்டார். இக்கட்டிடம், 5,546 சதுர மீட்டர் பரப்பளவில், 3 தளங்கள் மற்றும் நவீன வசதிகளுடன் கட்டப்பட் டுள்ளது.
தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணைய அலுவலகம், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், தேசிய நெடுஞ்சாலை அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம், நபார்டு மற்றும் கிராம சாலைகள் அலகின் தலைமைப் பொறியாளர் அலுவலகம் ஆகியவை இப்புதிய கட்டிடத்தில் இயங்கும்.
ஆணையம் தொடக்கம்: தமிழகத்தில் 6 வழிச் சாலைகள், அதிவேக விரைவுச் சாலைகள் உள்ளிட்ட பல்வேறு சாலை மேம்பாட்டுப் பணிகளை விரைந்து செயல்படுத்தவும் பொது மற்றும் தனியார் பங்களிப்பு போன்ற பல்வேறு முறைகளில் சாலைப் பணிகளை செயல்படுத்தவும், தமிழக சாலை கட்டமைப்பை உலகத் தரத்தில் மேம்படுத்தும் நோக்குட னும், தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த ஆணையத் தைத் தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின், அதன் இலச்சி னையையும் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, எஸ்.ரகுபதி, பெரியகருப்பன், ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மா.சுப்பிரமணியன், மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் முதல்வர் ஆய்வு: சென்னை, தியாகராய நகர் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம், 133-வது வார்டில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ 2-வது முகாம் நேற்று நடைபெற்றது. அங்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், பொதுமக்கள் அளித்த மனுக்களின் விவரங்கள் குறித்தும், முகாமில் செய்து தரப்பட்டுள்ள வசதிகளும் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த முகாமில், பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருவதையும், வங்கி கணக்கு தொடங்குவதற்குத் தேவையான உதவிகள் செய்யப்பட்டு வருவதையும் முதல்வர் பாராட்டினார். மேலும், முகாமில் மனுக்கள் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து வரும் பொதுமக்களின் மனுக்களையும் பெற்று நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.