மதுரை: ரூ.2 லட்சம் கடனுக்காக ஆடு மேய்க்க வைத்து கொத்தடிமைபோல நடத்தப்பட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த தம்பதியை மதுரை மாவட்டம் மேலூர் கோட்டாட்சியர் தலைமையிலான அதிகாரிகள் மீட்டனர். மதுரை அனஞ்சியூர் பகுதியில் இளம் தம்பதியை கொத்தடிமைபோல ஆட்டுக் கொட்டகையில் தங்க வைத்து ஆடு மேய்க்க வைக்கப்படுவதாக மேலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து, மேலூர் கோட்டாட்சியர் சங்கீதா, மதுரை கிழக்கு வட்டாட்சியர் மனேஷ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அங்கு கைக்குழந்தையுடன் காட்டுப் பகுதியில் ஆடுகளை மேய்த்த தம்பதியை மீட்டனர். விசாரணையில், அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பெருமங்களூரைச் சேர்ந்த ரகு (23), ராதா (22) என தெரிய வந்தது.
இவர்களுக்கு திருமணமாகி ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. பிரேமா என்ற பெண்ணிடம் வாங்கிய கடனுக்காக அவர்கள் கொத்தடிமைகளாக ஆடு மேய்க்க அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: பிரேமா என்பவரிடம் 2018-ல் இத்தம்பதி ரூ.30 ஆயிரம் கடன் வாங்கினர். இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.2 லட்சத்தை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில், ராமநாதபுரம், சிவகங்கை பகுதியில் ஆடு வளர்ப்பவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தம்பதியை ஆடு மேய்க்க பிரேமா அனுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் அங்காடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த திருப்பதி 6 மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் கொடுத்து ராமநாதபுரம் பகுதியிலிருந்து இத்தம்பதியை ஆடு மேய்க்க அழைத்து வந்துள்ளார். அவர்கள் கொத்தடிமைபோல நடத்தப்படுவது பற்றி எங்களுக்கு புகார் வந்தது.
இதையடுத்து அனஞ்சியூர் பகுதி வயல்வெளியில் கைக்குழந்தையுடன் ஆடு மேய்த்த தம்பதியை மீட்டோம். அவர்களை கொத்தடிமைபோல நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சிலைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். மீட்கப்பட்ட தம்பதியை, தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்து, அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்று கூறினர்.