மேட்டூர்: “சேது சமுத்திர திட்டத்துக்கு ரூ.1,800 கோடி செலவு செய்த பிறகு கைவிட்டு நிறுத்தி வைத்துள்ளனர்” என சேலம் எம்.பி செல்வணபதி குற்றம்சாட்டியுள்ளார்.
சேலம் மாவட்டம் மேட்டூர், கொளத்தூர், ஆர்.எஸ், வீரக்கல்புதூர் மற்றும் தாரமங்கலம் ஆகிய பகுதிகளில் திமுக சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், சேலம் எம்.பி-யுமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை இன்று (மே 6) திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலகத்தில், சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட எம்.பி-க்களுக்கான ஆலோசனை கூட்டம் 6 மாதத்துக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். ஆனால், ஓராண்டாகிய நிலையில் தற்போதுதான் நடைபெற்றது.
திருச்சி – ஈரோடு, திருநெல்வேலி – ஈரோடு, கோயமுத்தூர் – ஈரோடு, பாலக்கோடு – ஈரோடு, ராமேஸ்வரம் – கோயம்புத்தூர் ஆகிய ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களை சேலம் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும். ஈரோட்டில் இருந்து சென்னை செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேரத்தை மாற்றியமைத்து தர வேண்டும். சேலம் ரயில் நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல ஏதுவாக பேருந்து நிறுத்தம் அமைத்து தரவேண்டும்.
முள்ளுவாடி கேட்டில் சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும். டேனிஷ்பேட்டை ரயில் நிலையத்தில் உயர்மட்ட நடைபாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளேன். இவ்வளவு கோரிக்கை வைத்தும் இந்தக் கூட்டத்தைப் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியாமல் மத்திய அரசின் ரயில்வே அதிகாரிகள் நடந்து கொண்டுள்ளனர்.
பிரதமர் ராமேஸ்வரம் வந்தபோது ரூ 6,000 கோடியை கொடுத்துவிட்டேன் என ஒரு முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து விட்டு சென்றார். குஜராத் மற்றும் மகாராஷ்டிராவுக்கு அவர் கொடுத்த திட்டங்கள் 100% நிறைவடைந்துவிட்டது. ஆனால், ரயில்வே மூலம் அதிக வருவாய் அளிக்கும் தமிழகத்தை புறக்கணித்து வருகிறார்கள். குஜராத்தில் 8 துறைமுகங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஒரு துறைமுகத்தில், சரக்குகளை கையாள ரூ.2 லட்சம் கோடியில் ரயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள துறைமுகங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றி இருந்தால் தமிழ்நாடு வளர்ச்சி அடைந்து இருக்கும். இந்த திட்டத்துக்கு ரூ.1,800 கோடி செலவு செய்த பின்னர் திட்டத்தை கைவிட்டு நிறுத்தி வைத்துள்ளார்கள். தூத்துக்குடி துறைமுகம் வளர்ந்து விடக்கூடாது என்ற காரணத்தினால் இந்தத் திட்டத்தை கைவிட்டு உள்ளனர்,” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சம்பத்குமார், நகர செயலாளர் காசி விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் அர்த்தநாரீஸ்வரர், மிதுன் சக்கரவர்த்தி, பேரூர் செயலாளர் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.