சென்னை: பொதுத்துறை வங்கியில் கடன் பெற்று, மோசடி செய்ததாக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்திருந்த வழக்கை நிபந்தனையுடன் ரத்து செய்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதி, அபராதமாக தலா ரூ.15 லட்சத்தை சிபிஐ-க்கும் மாநில சமரச தீர்வு மையத்துக்கும் செலுத்த உத்தரவிட்டது.
வங்கியிடமிருந்து கடந்த 2013-ம் ஆண்டு வாங்கிய ரூ. 30 கோடி கடனை தனது சகோதர நிறுவனங்களுக்கு திருப்பிவிட்டதால் வங்கிக்கு ரூ.22.48 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கூறி அமைச்சர் நேருவின் சகோதரர் என்.ரவிச்சந்திரன் இயக்குநராக உள்ள ட்ரூ வேல்யூ ஹோம்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டது.
அதன்படி சிபிஐ கடந்த 2021-ம் ஆண்டு ரவிச்சந்திரன் மற்றும் ட்ரூ வேல்யூ ஹோமஸ், டிவிஎச் எனர்ஜி ரிசோர்சஸ் இந்தியா லிமிடெட் ஆகியவை மீது வழக்குப்பதிவு செய்தது. இதன் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் என்.ரவிச்சந்திரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ரவிச்சந்திரன் மற்றும் தனியார் நிறுவனங்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை நீதிபதி டி. பரத சக்ரவர்த்தி முன்பாக நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி நேற்று பிறப்பித்த தீர்ப்பு:இந்த வழக்கில் மனுதாரர் வங்கியில் பெற்ற கடன்தொகையை கடன் வசூல் தீர்ப்பாயம் மூலமாக செலுத்தியுள்ளார். இதில் மோசடி எங்கும் நடைபெறவில்லை. மனுதாரர் குறிப்பிட்ட காலத்துக்குள் கடனை செலுத்தியிருந்தால் சிபிஐ வழக்குப்பதிவு செய்திருக்காது.
மேலும் மனுதாரரின் இந்த செயலால் சிபிஐ தனது நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்க நேரிட்டுள்ளது. ஆகவே மனுதாரருக்கு ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இதில் ரூ.15 லட்சத்தை அவர் சிபிஐ-யிடமும், ரூ. 15 லட்சத்தை மாநில சமரச தீர்வு மையத்துக்கும் 8 வார காலத்துக்குள் செலுத்த வேண்டும். இந்த நிபந்தனையுடன் குற்றவழக்கு ரத்து செய்யப்படுகிறது.