சென்னை: தமிழகம் முழுவதும் ரூ.105 கோடி மதிப்பில் நடந்துள்ள இன்சூரன்ஸ் மோசடிகள் தொடர்பாக இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அளித்துள்ள 467 புகார்கள் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்து சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அனுப்ப போலீஸாருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒரு விபத்துக்கு பல்வேறு நீதிமன்றங்களில் இன்சூரன்ஸ் கோரி வழக்கு தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டது உள்ளிட்ட மோசடிகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது இன்சூரன்ஸ் நிறுவனம் தரப்பில், “இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் ரூ.105 கோடி மோசடி தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள 467 புகார்கள் மீது இதுவரை போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்யவில்லை.
எனவே அந்த புகார்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்து அந்த வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்றும் என வாதிடப்பட்டது. அப்போது காவல்துறை தரப்பில் இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, “ரூ.105 கோடி இன்சூரன்ஸ் மோசடி தொடர்பாக அளிக்கப்பட்டுள்ள 467 புகார்கள் மீது இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே இந்த புகார்கள் மீது உடனடியாக எப்ஐஆர் பதிவு செய்து சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு அனுப்ப வேண்டும்.
அந்தக்குழு விரைவாக விசாரணை நடத்த வேண்டும். அதேபோல ஓசூர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் 82 போலி இன்சூரன்ஸ் மோசடி வழக்குகளில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் குறித்தும், மாயமான வழக்கு கட்டுகள் குறித்தும் மாவட்ட நீதிபதிகள் உரிய விசாரணை நடத்தி அதுகுறித்த அறிக்கையை வரும் அக்.17-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.