திருப்பூர்: இளம்பெண் ரிதன்யா மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசியில் திங்கள்கிழமை மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா திருமணம் நடந்த 78 நாளில் கணவர் குடும்பத்தினரின் கொடுமை தாங்காமல் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது தந்தைக்கு அவர் அனுப்பிய வாட்ஸ் அப் ஆடியோ, சமூகத்தில் பலரையும் உலுக்கியது. இதுதொடர்பாக, ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரிதன்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் இன்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது. இதில் பெண்கள், பல்வேறு சமூக நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக பங்கேற்று ரிதன்யா உருவப்படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பெண்கள் கூறும்போது, “பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூகத்தில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. பெண்களுக்கு வாழ்வில் மன வலிமை மிக, மிக அவசியம். குழந்தைகளுக்கு வீட்டில் நல்ல சூழலை பெற்றோர் உருவாக்கித்தர வேண்டும். ரிதன்யாவின் மரணம் சமூகத்தில் பெற்றோர் பலருக்கும் பல்வேறு பாடங்களை தந்துள்ளது. இந்த அற்புதமான வாழ்க்கையில், பெண்கள் எப்போதும் தவறான முடிவுகளை எடுக்கக்கூடாது” என்றனர். அஞ்சலி நிகழ்வில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
ஜாமீன் மனு தள்ளுபடி: இதனிடையே, ரிதன்யாவின் மாமியார் சித்ராதேவி கைது செய்யப்படுவதற்கு முன்பே கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் ஜாமீன் மனு கோரி திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். பிணை வழங்கக் கூடாது என ரிதன்யாவின் பெற்றோர் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இன்று நீதிமன்றத்தில் இருதரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.