திருப்பூர்: இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும் என்று முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் கணவன் குடும்பத்தார் கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாவின் வீட்டுக்கு நேற்று சென்ற முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், ரிதன்யாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனக்கும் ரிதன்யாவின் குடும்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரிதன்யா கடைசியாக அவரது தந்தைக்கு அனுப்பிய ஆடியோவை கேட்ட பின்புதான், அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டுமென தனிப்பட்ட முறையில் நான் இங்கு வந்துள்ளேன். ரிதன்யா உயிரிழப்புக்கு முன்பு அனுப்பிய ஆடியோ மிகவும் முக்கியமான சாட்சியாக உள்ளது. ரிதன்யா தரப்பு வழக்கறிஞரிடம் பேசினேன். முதல் தகவல் அறிக்கையையும் படித்தேன்.
இளம்பெண் ரிதன்யாவின் ஆடியோ பேச்சு வழக்கில் முக்கிய ஆதாரமாக இருக்கும். மன ரீதியாக, உடல் ரீதியாக யார், யார் துன்புறுத்தினர் என அதில் கூறியுள்ளார். ரிதன்யாவின் செல்போன் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த சாட்சியத்தை வைத்து விசாரித்தால், ஒரு வாரத்திலேயே தண்டனை கொடுத்து விடலாம். பல இடங்களில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் இறக்கிறார்கள். ஆனால், ரிதன்யா திருமணமான 78 நாட்களிலேயே இறந்துள்ளார். அது அவரது பெற்றோருக்கு பெரும் இழப்பாகும். இந்த வழக்கை காவல் துணைக் கண்காணிப்பாளர் விசாரித்துக் கொண்டிருக்கிறார். மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக விசாரிக்க வேண்டும்.
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நேரடியாகவே விசாரிக்கலாம். விசாரணையை ஆடியோ, வீடியோ முறையில் பதிவு செய்ய வேண்டும். திருப்புவனம் அஜித்குமார் கொலை சம்பவத்தை நேரடியாக உயர் அதிகாரிகள் விசாரிக்க வேண்டும். இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.