சென்னை: சென்னை ராயப்பேட்டையில் ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கூடிய நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டும் பணிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் சார்பில் சேப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட சிஐடி குடியிருப்பு முதல் தெருவில், 50 ஆயிரம் பேர் பயன்பெறும் விதமாக ரூ.3.01 கோடியில் 6.25 எம்எல்டி செயல்திறன் கொண்ட வாயு கட்டுப்பாட்டு அமைப்புடன் கூடிய சாலையோர கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
அதைத் தொடர்ந்து ராயப்பேட்டை டாக்டர் பெசன்ட் சாலையில் (வார்டு 116) ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் 50 படுக்கை வசதியுடன் கட்டப்படவுள்ள நகர்ப்புற சமுதாய நல மருத்துவமனை கட்டுமானப் பணியை அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார்.
இத்துடன் சிங்கார சென்னை 2.0 திட்ட நிதியின் கீழ் 114-வது வார்டு பங்காரு தெருவில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.2.47 கோடியில் 7 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்த உதயநிதி, அங்கு பயிலும் மாணவர்களுக்கு எவர் சில்வர் குடிநீர் குடுவை, புத்தகப் பை மற்றும் இனிப்புகளை வழங்கி கலந்துரையாடினார்.
தொடர்ந்து கொய்யாத்தோப்பு கோமளீஸ்வரன் பேட்டை நாகப்பன் தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் ரூ.1.35 கோடியில் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடத்தையும், சேப்பாக்கம் லாக் நகரில் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.30 கோடியில் கட்டப்பட்ட பல்நோக்கு மைய கட்டிடத்தையும் துணை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னை குடிநீர் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் டி.ஜி.வினய், செயல் இயக்குநர் கவுரவ் குமார், வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிசைகள் மறைப்பு: இதற்கிடையே லாக் நகர் பகுதியில் பல்நோக்கு மைய கட்டிட திறப்பு விழாவுக்காக துணை முதல்வர் வருகையையொட்டி 200 மீட்டர் தூரத்துக்கு பக்கிங்ஹாம் கால்வாய் ஒட்டிய பகுதிகளிலும், சாலையோர குடியிருப்புகளை (குடிசைப் பகுதிகள்) மறைக்கும் வகையிலும், இருபுறமும் திரைச்சீலை அமைக்கப்பட்டிருந்தது. துணை முதல்வர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இதுபோன்று நடந்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.