சென்னை: சென்னை ராயபுரம் பேசின்பாலம், பால் டிப்போ பகுதியில் வசித்து வந்த 159 குடும்பங்களுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை, ராயபுரம் சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பேசின் பாலம் சாலையில் அமைந்துள்ள பால் டிப்போ பகுதியில் தண்டையார்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 60 ஆயிரம் சதுரஅடி நிலத்தில் 159 குடும்பங்கள் வசித்துவருகின்றன.
இவர்கள் 75 ஆண்டு களாக மாட்டுக் கொட்டகை அமைத்து பால் வியாபாரம் செய்து இவ்விடத்திலேயே வசித்து வந்தனர். மழை வெள்ளத்தில் பாதிப்பு இந்த இடம் தாழ்வான பகுதி என்பதால் ஒவ்வொரு ஆண்டும் பருவமழை காலங்களில் மழைநீர் வீட்டுக்குள் புகுந்து 159 குடும்பங்களும் மிகுந்த பாதிப்படைவதால் இவர்களை மறுகுடியமர்வு அமர்த்த வேண்டி இருந்தது.
கடந்த 2024-ம் ஆண்டு மழைக்காலத்தில், வெள்ள நீரினால் சூழப்பட்ட இந்த பகுதியை பார்வையிட்ட துணை முதல்வர், 159 குடும்பங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் வசிக்க ஏற்பாடு செய்வதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.
தொடர்ந்து, இந்த 159 குடும்பத் தினருக்கும் மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறுகுடியமர்வு செய்ய ஆணை கள் தயார் செய்யப்பட்டன. இந்நிலையில் ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள முகாம் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், 159 குடும்பங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு, மூலக்கொத்தளம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கான வீடு ஒதுக்கீடு ஆணைகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கள் கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்.டி.சேகர், ஆர்.மூர்த்தி, வீட்டு வசதித்துறை செயலர் காகர்லா உஷா, துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.