ராமேசுவரம்: ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமா் மோடி கடந்த ஏப்.6-ம் தேதி திறந்து வைத்தாா். இதைத் தொடா்ந்து, ஏப். 7-ம் தேதியிலிருந்து ராமேசுவரத்திலிருந்து மதுரைக்கு தினசரி 3 பயணிகள் ரயில்கள்,சென்னைக்கு தினசரி 3 விரைவு ரயில்கள், திருச்சிக்கு 1 விரைவு ரயிலும் ராமேசுவரம் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.
மேலும் ராமேசுவரத்திலிருந்து விழுப்புரத்துக்கு வாரத்துக்கு மூன்று முறை அதிவிரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து கன்னியாகுமரிக்கு வாரம் இருமுறை அதிவிரைவு ரயில், ராமேசுவரம்-கோவை வாராந்திர விரைவு ரயில், ராமேசுவரம்-பெரோஸ்பூர் வாராந்திர விரைவு ரயில், ராமேசுவரம்-திருப்பதி வாரம் இருமுறை விரைவு ரயில், ராமேசுவரம்-ஓகா வாராந்திர விரைவு ரயில், ராமேசுவரம்-புவனேஷ்வர் வாராந்திர விரைவு ரயில் ஆகிய சேவைகள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதில், மே 14-ம் தேதியிலிருந்து, ராமேசுவரம் – மதுரை பயணிகள் ரயில் காலை மாலை 6 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கும், இரண்டாவது சேவை காலை 10.45 மணிக்கு பதில் 10.30 மணிக்கும், மூன்றாவது சேவை பிற்பகல் 3.25 மணிக்கு பதிலாக 3.20 மணிக்கும் புறப்படும்.
ராமேசுவரம் – திருச்சி எக்ஸ்பிரஸ் பிற்பகல் 2.50 மணிக்கு பதில், 3 மணிக்கு புறப்படும். ராமேஸ்வரம் – சென்னை எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக மாலை 5.50 மணிக்கு புறப்படும். ராமேசுவரம் – கோவை எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.55 மணிக்கு புறப்படும். ராமேசுவரம் – சென்னை சேது எக்ஸ்பிரஸ் இரவு 8.35 மணிக்கு பதிலாக 8.50 மணிக்கு புறப்படும்.
மே 15ம் தேதியிலிருந்து, ராமேஸ்வரம் – திருப்பதி எக்ஸ்பிரஸ் மாலை 4.20 மணிக்கு பதில் 4.30 மணிக்கு புறப்படும். ஜூன் 7-ம் தேதியிலிருந்து ராமேசுவரம் – கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரவு 9.10 மணிக்கு பதிலாக 9.15 மணிக்கு புறப்படும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.