ராமேசுவரம்: ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் 7 பேருக்கு இலங்கை நீதிமன்றம் 5-வது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.
ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஈசாக் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் ரூதர், சண்முகம், எடிசன், சக்திவேல், ஜெகதீஷ், டல்வின் ராஜ், அன்பழகன் ஆகிய 7 மீனவர்கள் நெடுந்தீவு அருகே பாக். நீரிணை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் ஜுலை 13-ல் கைது செய்யப்பட்டனர்.
படகிலிருந்த 7 மீனவர்கள் மீது, எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீனவர்களின் காவல் இன்று (புதன்கிழமை) நிறைவடைந்ததை தொடர்ந்து 7 மீனவர்களும் ஊர்க்காவல் துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை நீதிபதி செப்டம்பர் 17 வரையிலும் ஐந்தாவது முறையாக காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து, 7 மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.