ராமேசுவரம் / சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 10-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ராமேசுவரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர்.
நாட்டின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் தனது பதவிக் காலத்துக்குப் பின்னர் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பள்ளி, கல்லூரிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசி, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளித்து வந்தார்.
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள கல்லூரி விழாவில் 2015 ஜூலை 27-ம் தேதி பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மயக்கமடைந்து உயிரிழந்தார். பின்னர், அப்துல் கலாமின் உடல் ராமேசுவரம் தீவில் உள்ள பேக்கரும்பு என்னும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், கலாமின் 10-வது ஆண்டு நினைவு நாள் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
பேக்கரும்பு அப்துல் கலாம் நினைவிடத்தில் நேற்று காலை கலாமின் சகோதரர் மகன் ஜெயினுலாபுதின், மகள் நசிமா மரைக்காயர், மருமகன் நிஜாம், பேரன்கள் ஷேக் தாவூத், ஷேக் சலீம், ஆவுல் மீரா மற்றும் குடும்பத்தினர் இஸ்லாமிய முறைப்படி சிறப்புப் பிரார்த்தனை செய்தனர்.
ராமேசுவரம் பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது நாசர், பாஜகவின் தேசிய சிறுபான்மையினர் பிரிவு செயலாளர் வேலூர் இப்ராஹிம் மற்றும் பல்வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, இஸ்ரோ தலைவர் நாராயணன், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், வட்டாட்சியர் அப்துல் ஜபார் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள், ராமேசுவரம் வந்த சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரும் கலாமின் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அரசியல் தலைவர்கள் புகழஞ்சலி: அப்துல் கலாம் நினைவு நாளையொட்டி பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: எளிய குடும்பத்தில் பிறந்து, உலகம் போற்றும் மாமனிதராக உயர்ந்து, இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெரும்புகழைத் தேடித்தந்த கலாமின் நினைவு நாளில், அவரை வணங்குகிறேன்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தியாக இந்தியா உருவெடுக்க முக்கிய காரணங்களில் ஒருவராகத் திகழ்ந்த அப்துல் கலாமின் சாதனைகளை நினைவுகூர்ந்து, அவரது பெருமையை போற்றுவோம்.
இதேபோல, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்டோரும் அப்துல் கலாமுக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.