சென்னை: ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவையொட்டி, சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் 2-வது நாளாக நேற்று ராமாயண நாட்டிய நாடகம் நடைபெற்றது. ஏராளமானோர் இந்த நாடகத்தை கண்டு ரசித்தனர்.
சென்னையில் நடைபெற்று வரும் ‘சிங்கா 60’ கலைத் திருவிழாவின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் ‘அப்சராஸ் நடன நிறுவனம்’ சார்பில் திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ராவில் ராமாயண நாட்டிய நாடகம் நேற்று முன்தினம் தொடங்கியது.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் நாட்டிய நாடகம் நடைபெற்றது. கலை இயக்குநர் அரவிந்த் குமாரசாமி இந்நாடகத்தை இயக்கினார். மகாகவி பாரதியாரின் பேரன் ராஜ்குமார் பாரதி இசை அமைத்திருந்தார். நடனத்தை மோகன பிரியன் தவராஜாவும், ஆடை, ஆபரணங்களை தமிழக கலைஞர்கள் அபிஷேக் ரகுராம், கவிதா நரசிம்மன் ஆகியோரும் வடிவமைத்திருந்தனர்.

இந்தியா-இந்தோனேசியா நாடுகளின் ராமாயணத்தை தழுவி வடிவமைக்கப்பட்ட இந்தநாடகத்தில் சிங்கப்பூர், இந்தோனேசியா, இந்தியா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த நடனக் கலைஞர்கள் இடம் பெற்றனர். சங்கீத நாடக அகாடமி விருது பெற்ற, மூத்த பரத நாட்டியக் கலைஞர் ஊர்மிளா சத்ய நாராயணன் இதில் சீதையாக நடித்திருந்தார்.
நான்கு இளவரசர்கள் பிறப்பில் தொடங்கிய இந்த கதை, சீதை அபகரிப்பு, தேடல், அனுமன் சந்திப்பு, சுந்தர காண்டம், சீதை சந்திப்பு, சூடாமணியை வாங்குதல் என்று வளர்ந்து, யுத்தத்துடன் நிறைவடைந்தது. இந்தோனேசியா ராமாயணத்தில் ராமர் பட்டாபிஷேகம் இல்லை என்பதால், யுத்த காண்டத்துடன் நாட்டிய நாடகம் நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில், பரதநாட்டியக் கலைஞர்கள் பத்மா சுப்பிரமணியம், ஜெயந்தி சுப்பிரமணியம் மற்றும் அப்சராஸ் நடன நிறுவனக் கலைஞர்கள், கலாஷேத்ரா மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.