ராமேசுவரம்: ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து நேற்று ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்றது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளூர் மக்கள் சிறப்பு தரிசன வழியில் கட்டணமின்றி சுவாமியை தரிசித்து வருகின்றனர். ஆனால், சமீபத்தில் பொறுப்பேற்ற இணை ஆணையர், உள்ளூர் மக்கள் ரூ.200 கட்டண சிறப்பு தரிசன வழியில் வருவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்.
இதனால், உள்ளூர் பக்தர்களுக்கும், கோயில் நிர்வாகத்தினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் பக்தர்கள் கட்டணமின்றி மூலவரை தரிசனம் செய்ய அனுமதிக்கக் கோரியும், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்கள் நலப் பேரவை சார்பில் ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
அதைத்தொடர்ந்து ராமேசுவரம் வட்டாட்சியர் அலுவலகத்திலும், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையில் தீர்வுகாணப்படவில்லை. இந்நிலையில், ராமநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை கண்டித்து ராமேசுவரத்தில் நேற்று ஆலயப் பிரவேசப் போராட்டம் நடைபெற்றது.
மக்கள் பாதுகாப்பு பேரவையைச் சேர்ந்த செந்தில்வேல், பிரபாகரன் ஆகியோர் போராட்டத்தை ஒருங்கிணைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 45 பெண்கள் உட்பட 150 பேரை போலீஸார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.