ராமநாதபுரம்: மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் 54 படகு உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ 3.96 கோடி நிவாரண உதவித் தொகையினை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மீனவர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர்பாட்சா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டு மீட்க இயலாத நிலையில் அங்கு நெடுங்காலமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகளின் உரிமையாளர்களுக்கு முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 48 விசைப்படகுகளுக்கு தலாரூ.8 லட்சமும், மற்றும் 6 நாட்டுப்படகுகளுக்கு தலா ரூ.2 லட்சம் வீதமும் என மொத்தம் 54 பயனாளிகளுக்கு ரூ.3.96 கோடி நிவாரண உதவித்தொகைக்கான காசோலையை ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் கோபிநாத், உதவி இயக்குநர்கள் தமிழ்மாறன், சிவக்குமார், ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.