ராமநாதபுரம்: விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உடல் உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இளம்பெண்ணின் உடலுக்கு மருத்துவர்கள், பணியாளர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பேரையூர் கொல்லங்குளத்தைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது மனைவி சந்தியா (27). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில், கடந்த 28-ம் தேதி மதியம் சந்தியா கமுதிக்கு செல்வதற்காக பேரையூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து அவ்வழியாக சென்ற உறவினர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் லிப்ட் கேட்டு சென்றுள்ளார். வாகனத்தில் ஏறிய சில நிமிடங்களில் சந்தியா வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்து மயங்கியுள்ளார்.
பின்னர் அவரை ஆம்பலன்ஸ் மூலம் கமுதி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சைக்குப் பின், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், அன்றிரவே அவர் மூளைச்சாவு அடைந்ததாக அவரது குடும்பத்தினரிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதனையடுத்து, அவரது குடும்பத்தினர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். பின்னர் இன்று காலை மூளைச் சாவடைந்த சந்தியாவின் இரண்டு கண்கள், இரண்டு கிட்னி, இதயம், கல்லீரல் ஆகிய உறுப்புகள் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, மதுரை ராஜாஜி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைக்கு இரண்டு ஆம்புலன்சுகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் மருத்துவமனை வளாகத்தில் சந்தியாவின் உடலுக்கு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அமுதா ராணி, பேரையூர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர் முருகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மருத்துவர்கள், செவிலியர்கள், செவிலிய மாணவிகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மைப்பணியாளர்கள் சந்தியாவின் உடலுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக சொந்த கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் முதன்முறையாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதராணி கூறியது: “கடந்த 28-ம் தேதி விபத்தில் சிக்கிய சந்தியாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவரது மூளை செயல்படுகிறதா என நடைபெற்ற பரிசோதனையில் அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக தெரியவந்தது. அதன்பின் அவரது குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது. அவரது குடும்பத்தினர் சந்தியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர்.
அதன்பின் அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் பட்டியலின்படி பயனாளிகளுக்கு வழங்க இரண்டு கண்கள், இரண்டு கிட்னிகள், இதயம், கல்லீரல் இன்று காலை மதுரை அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் சந்தியாவின் உடலுக்கு மரியாதை செலுத்தப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது” என தெரிவித்தார்.