ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் கணிதம் மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகள் தொடங்க வேண்டும் என வர்த்தக சங்கம் சார்பாக கோரிக்கை விடப்பட்டுள்ளது.
கடலாடி வர்த்தக சங்கத் தலைவர் ராமகிருஷ்ணன் சென்னையிலுள்ள கல்வி இயக்குநரகத்திற்கு அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கடந்த 2012 ஆண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது. இங்கு இளநிலை பாடப்பிரிவுகளான தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் கணிப்பொறி அறிவியல் ஆகிய பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு 350-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
இதில் கடலாடி, சாயல்குடி, முதுகுளத்தூர், கமுதி, சிக்கல் சுற்று வட்டாரத்திலுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து மாணவர், மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இளநிலை பிரிவில் இருந்த கணிதம் பாடத்தை கடந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் நீக்கியது. இதனால் கணிதத்தை அடிப்படையாக கொண்டு படிக்க விரும்பும் கிராமப்புற மாணவர்களின் படிப்பு கேள்விக் குறியாகி வருகிறது.
இதனை போன்று கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகள் இல்லாததால் இப்பகுதி மாணவர்கள் வெளிமாவட்டங்களுக்கு சென்று படிக்கும் நிலை இருக்கிறது. இதனால் ஏழை,எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் போதிய வசதியின்றி மேல்நிலை படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. இதனைப் போன்று இளநிலை முடித்த மாணவிகள் மேற்படிப்பு படிக்கும் வசதியின்றி திருமணம் முடித்து கொடுக்கும் நிலை இருக்கிறது. எனவே கடலாடி அரசு கல்லூரியில் மற்றும் முதுநிலை பாடப்பிரிவுகளை துவங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.