2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளித்து, ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், அந்தக் கூட்டம் சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானது என்று அன்புமணி தலைமையில் பனையூரில் நடந்த பாமக அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திண்டிவனம் அருகே ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு கூட்டத்துக்குப் போட்டியாக சென்னையை அடுத்த பனையூரில் அன்புமணி தலைமையில் அரசியல் தலைமைக் குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது. கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
‘பாமக அடிப்படையில் ஜனநாயக அமைப்பு ஆகும். பாமக நிறுவனரான ராமதாஸை கட்சி எப்போதும் கொண்டாடுகிறது. போற்றி வணங்குகிறது. அதேநேரத்தில் கட்சியை வழிநடத்தி செல்வது பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவரின் பணியாகும். கட்சியின் செயல்பாடுகள் குறித்த அனைத்து அதிகாரங்களும் பொதுக்குழுவால் முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அன்புமணிக்கு மட்டுமே உள்ளது.
கட்சியின் தலைவர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் ஆகியோர் பங்கேற்காமல் அரசியல் தலைமைக் குழு, செயற்குழு, பொதுக்குழு என்கிற பெயர்களில் நடைபெறும் கூட்டங்கள் கட்சியின் அமைப்பு சட்ட விதிகளுக்கும், சட்டத்துக்கும் முரணானவை ஆகும். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட அன்புமணி தலைமை மீது இந்தக் கூட்டம் நம்பிக்கை தெரிவிக்கிறது. கட்சியை தொடர்ந்து வழிநடத்தி செல்வதற்கும், அன்புமணியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நின்று, அவரது கரங்களை வலுப்படுத்துவோம் என்று கூட்டம் உறுதி ஏற்கிறது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசை கண்டித்து அன்புமணி தலைமையில் வரும் 20-ம் தேதி போராட்டம் நடத்தப்படும். அன்புமணி மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெற செய்ய கடுமையாக உழைப்போம். பெண்களும், குழந்தைகளும் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழகத்தில், சட்டம் – ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்துவிட்ட திமுக அரசை அகற்ற பாமக உறுதியேற்கிறது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராமதாஸ் கூட்டத்தின் தீர்மானங்கள்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் ராமதாஸ் தலைமையில் நடந்த பாமக மாநில செயற்குழுக் கூட்டத்தில், ‘2026 சட்டப்பேரவைத் தேர்தல், 2029 மக்களவை தேர்தலில் அதிக இடங்களை கொடுக்கும் நல்ல கூட்டணியை தேர்வு செய்யும் அதிகாரத்தை நிறுவனர் ராமதாஸுக்கு அளிப்பது, தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது’ என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும், ‘பொது வெளியில் நிறுவனர் மற்றும் தலைவர் ராமதாஸுக்கும், கட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் செயல் தலைவரின் (அன்புமணி) செயலை வன்மையாக கண்டித்து, அவர் மீது கட்சி நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் அதிகாரத்தை ராமதாஸுக்கு வழங்குவது, விளை பொருட்களுக்கு தற்போது வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையை இரட்டிப்பாக வழங்கி விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும், உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், மாநில பொதுச் செயலாளர் முரளி சங்கர், பாட்டாளி தொழிற்சங்க பேரவை பொதுச் செயலாளர் முத்துகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். | ராமதாஸ் பேசியது என்ன? – வாசிக்க > கூட்டணியை தேர்வு செய்ய ராமதாஸுக்கு அதிகாரம், அன்புமணிக்கு கண்டனம்: பாமக செயற்குழுவில் தீர்மானம்