விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் உள்ள தொலைபேசியை ஹேக் செய்து ஒட்டுகேட்டுள்ளதாக, கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவிக்கு, ராமதாஸின் தனி செயலாளர் சுவாமிநாதன் நேற்று புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், “தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில் சென்னையைச் சேர்ந்த நிறுவனம் மூலமாக ‘ACT WIFI’ இணைப்பை சசிகுமார் என்பவர் கொடுத்துள்ளார்.
இதில் சிசிடிவி இணைப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ராமதாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் உடனுக்குடன் வெளியில் உள்ள நபர்களுக்கு சென்றடைந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில், தனியார் நிறுவனம் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, ராமதாஸ் வீட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், அவரது தொலைபேசியில் ‘PORT FORWARDING METHOD’ முறையில் வெளியில் உள்ள நபர்களுக்கு மாற்றம் செய்து, பின்னர் சென்னையில் உள்ள நபர்களுக்கு தகவல்கள் சென்றடைந்ததை உறுதி செய்துள்ளோம்.
ராமதாஸ் வீட்டில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மற்றும் தொலைபேசியை சட்ட விரோதமாக ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சசிகுமார் என்பவர், அன்புமணியின் நிதி மேலாளராக உள்ளார். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இந்த மனுவின் நகல் மற்றும் தொலைபேசிக்கான மோடம் ஆகியவற்றை கோட்டக்குப்பம் டிஎஸ்பி உமாதேவியிடம், ராமதாஸ் வீட்டு ஊழியர்கள் வழங்கினர்.
சசிகுமார் மறுப்பு: இதுகுறித்து சசிகுமார் கூறும்போது, “சிறந்த இணையதள வசதி வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் தைலாபுலத்தில் ‘ACT WIFI’ இணைப்பு கொடுக்கப்பட்டது. அத்துடன் எனது பணி முடிந்துவிட்டது. இந்நிலையில், தேவையின்றி சுவாமிநாதன் என்பவர் என் மீது தவறான குற்றச்சாட்டை டிஎஸ்பியிடம் தெரிவித்துள்ளார்” என்றார்.