திண்டிவனம்: ராமதாஸ் – அன்புமணி மோதல் விவகாரம் குறித்து பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறுகையில், “விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.
திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை பாமக நிறுவனர் ராமதாஸை, கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். பின்னர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறியது: “ராமதாஸும், அன்புமணியும் 45 நிமிடங்கள் பேசினர். இது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இருவரும் சந்திக்கவில்லை என்று தவறான தகவலைப் பரப்புகின்றனர். தற்போது ராமதாஸ் தெம்பாக இருக்கிறார். இருவரும் நல்ல செய்தியை சொல்வார்கள்.
உட்கட்சி பிரச்சினையை வெளியே பேசுவதே தவறு. கட்சி என்பது குடும்பம். குடும்பப் பிரச்சினையை வெளியே பேசக்கூடாது. ராமதாஸும் அன்புமணியும் 45 நிமிடம் பேசியுள்ளனர். இவருவம் சந்தித்து பேசவில்லை என திட்டமிட்டு தவறான தகவலை பரப்புகின்றனர். வதந்தியை யாரும் நம்ப வேண்டாம். ராமதாஸை மரியாதை நிமித்தமாக ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். கட்சி நிர்வாகிகளும், கட்சிக்கு அப்பாற்பட்டவர்களும் ராமதாஸை சந்திக்கின்றனர். அரசியலைப் பொறுத்தவரை என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். விரைவில் இரு தரப்பிலும் சமாதானம் ஏற்படும். அதற்கான தொடக்கம் அமைந்துவிட்டது. நல்ல தீர்வு ஏற்படும்” என்று ஜி.கே.மணி கூறினார்.
முன்னதாக, பாமக தலைமையிடத்தில் மோதல் நீடிக்கும் நிலையில், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்துக்கு தந்தையும் நிறுவனருமான ராமதாஸை சந்திக்க மகனும் தலைவருமான அன்புமணி வியாழக்கிழமை காலை சென்றார். தைலாபுரம் இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் அன்புமணி இருந்தார். இருவருக்கும் இடையே உடன்பாடு எட்டவில்லை. பின்னர் அவர், இறுகிய முகத்துடன் புறப்பட்டு சென்றார். அவர் சென்ற சில மணிதுளிகளில் ஆடிட்டர் குருமூர்த்தி, அதிமுக முன்னாள் நிர்வாகி சைதை துரைசாமி ஆகியோர் தைலாபுரம் இல்லத்துக்குள் நுழைந்தனர். இவர்கள் இருவரும், ராமதாசுடன் சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.