சென்னை: நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் உடல், ராணுவ மரியாதையுடன் 42 குண்டுகள் முழங்க நேற்று தகனம் செய்யப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக் கள் அஞ்சலி செலுத்தினர்.
பாஜகவின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல.கணேசன் சென்னையில் நேற்று முன்தினம் காலமானார். இதையடுத்து, அவரது உடல் சென்னை தி.நகரில் உள்ள இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து நேற்று காலை, வீட்டில், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக எம்பி. கனிமொழி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக இளைஞர் அணி செயலாளர் விஜய பிரபாகரன், இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிர மணியன் கடேஸ்வரன், இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், நடிகர் சரத்குமார், ஆம் அத்மி கட்சி தமிழக தலைவர் வசீகரன், மற்றும் பாஜக கட்சி பிரமுகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் முப்படைகள் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது உடல் மேல் தேசியக் கொடி போர்த்தப்பட்டது.
அதை தொடர்ந்து நேற்று காலை அவரது வீட்டில் இருந்து வெங்கட நாராயண தெருவில் உள்ள கண்ணதாசன் மைதானத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கொண்டு வரப்பட்டது. அங்கே பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக அரசு சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். நாகாலாந்து மாநில முதல்வர் நைபியு ரியோ, தலைமை செயலர், டிஜிபி மற்றும் அமைச்சர்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், காங்கிரஸ் முன்னாள் தலைவர் தங்கபாலு, மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பாஜக முன்னாள் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ வானதி சீனிவாசன் மற்றும் பாஜக நிர்வாகிகள்,விஐடி நிறுவனர்-வேந்தர் கோ.விசுவநாதன், விஐடி துணை தலைவர் ஜி.வி.செல்வம் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.

முப்படை அதிகாரிகள் மரியாதை: இதையடுத்து, அவரது குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவருக்கு முப்படைகள் சார்பில் அதிகாரிகள் மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். ஆளுநர் ஆர்.என்.ரவி, மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ, மாநில அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், ரகுபதி, மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வால், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்,பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். இல.கணேசன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, 42 குண்டுகள் முழங்க ராணுவ வீரர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இதையடுத்து மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.