சென்னை: ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட விரைவு ரயில்களில் டைனமிக் கட்டண முறையை நீக்கக் கோரி, ரயில்வே அமைச்சருக்கு அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் மனு அளித்தனர். புதுடெல்லியில், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை அகில பாரதிய கிராஹக் பஞ்சாயத்து நுகர்வோர் அமைப்பு (ஏ.பி.ஜி.பி. நுகர்வோர் அமைப்பு) நிர்வாகிகள் அண்மையில் சந்தித்து, பிரீமியம் ரயிலில் டைனமிக் கட்டண முறையை நீக்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளித்தனர்.
அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி மற்றும் பிரீமியம் ரயில்களில், படிப்படியாக அதிகரிக்கும் டைனமிக் கட்டண முறையை நீக்க வேண்டும். ரயில் பயணிகளுக்கான முன்பதிவில் கடைசியாக அட்டவணையை வெளியிடும்போது, காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்களுக்கு ரத்து கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
அனைத்து ரயில் பெட்டிகளிலும் ஒரு மேற்கத்திய கழிப்பறை, 3 இந்திய கழிப்பறை என்ற முறையை மாற்றி, 2 மேற்கத்திய கழிப்பறை மற்றும் 2 இந்திய கழிப்பறை உடைய வடிவமைப்பை உருவாக்க வேண்டும்.
அதிகமான மெமு ரயில்களை இயக்கும் வகையில், மதுரையில் மெமு ரயில் பராமரிப்பு பணிமனை அமைக்க வேண்டும். இதுதவிர, திருவண்ணாமலை ரயில் நிலையத்தை புதிய முனையமாக்க வேண்டும். சென்னை – தூத்துக்குடி இடையே பகல் நேர அம்ரித் பாரத் ரயில் இயக்க வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுவில் அகில இந்திய அளவில் செயல்படுத்த வேண்டிய 3 கோரிக்கைகளும், தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய 6 கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. மனுவைப் பெற்றுக்கொண்ட ரயில்வே அமைச்சர் கோரிக்கைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.