சென்னை: சென்னை தரமணி ராஜீவ்காந்தி சாலையில் பள்ளம் ஏற்பட்ட பகுதியில், சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சீர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
சென்னை சோழிங்கநல்லூரிலிருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி நேற்று முன்தினம் மாலை வாடகை கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாடகை காரில் ஐடி ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 3 பேர், ஓட்டுநர் ஆகியோர் பயணித்தனர்.
தரமணியில் டைடல் பார்க் சந்திப்பு அருகில், ராஜீவ்காந்தி சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென் சாலை நடுவே சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு, கார் பள்ளத்தில் விழுந்தது. தகவலறிந்து வந்த போலீஸார், மற்றும் தீயணைப்பு வீரர்கள், கிரேன் உதவியுடன் காரை மீட்டு, அதிலிருந்து 5 பேரையும் காயமின்றி மீட்டனர். இதனால் அந்தச் சாலையில் நேற்று முன்தினம் மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்தப் பள்ளத்துக்கும், மெட்ரோ ரயில் பணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனச் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. தொடர்ந்து சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது.
இது தொடர்பாகச் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: விபத்து ஏற்பட்ட பகுதியில் 2.2 மீட்டர் விட்டம் கொண்ட ராட்சத கழிவு நீர் குழாய் செல்கிறது. இந்தக் குழாய் வழியாகத்தான் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுநீர் பெருங்குடியில் உள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறது. அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டவுடன், இந்தக் குழாய் வழியாகச் செல்லும் கழிவுநீர், ஏற்கெனவே உள்ள பழைய குழாய் வழியாகப் பெருங்குடிக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதனால் கழிவுநீர் சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த இடத்தில் குழாயில் விரிசல் ஏற்பட்டதால், மண் அரிப்பு ஏற்பட்டு, பள்ளம் ஏற்பட்டுள்ளது, ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்தக் குழாயை மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று (மே 18) இரவுக்குள் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளத்தைச் சீர் செய்து, மீண்டும் போக்குவரத்தை தொடங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.