திருவாரூர்: ராசி மணலில் அணை கட்டினால் 62 டிஎம்சி தண்ணீரை சேமிக்க முடியும் என்ற விவசாயிகளின் கோரிக்கைக்கு, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆதரவு தெரிவித்து பேசினார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சார பயணத்தை மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, திருவாரூரில் இன்று விவசாயிகளை சந்தித்தார்.
அப்போது அவர் விவசாயிகள் மத்தியில் பேசியதாவது: மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், வரும் வழியில் உள்ள நகரப்பகுதி கழிவுநீர் கலந்து மாசுபடுவதால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்காகவும், கடைகோடி விவசாயிக்கும் சுத்தமான தண்ணீர் கிடைக்க வேண்டும், 20 மாவட்டங்களில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் காவிரி நீர் சுத்தமாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், கடந்த அதிமுக ஆட்சியின் போது, ‘நடந்தாய் வாழி காவேரி’ என்கின்ற திட்டம் வகுத்து, மத்திய அரசிடம் நிதி ஒதுக்கீடு கேட்கப்பட்டது.
அதனடிப்படையில், குடியரசு தலைவர் ஒப்புதலும் பெற்று ரூ.990 கோடி நிதி ஒதுக்கீடு மத்திய அரசிடமிருந்து பெறப்பட்டது. ஆனால் அந்தத் திட்டத்தை இந்த அரசு கிடப்பில் போட்டு வைத்துள்ளது. ராசி மணலில் அணை கட்ட வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு கட்டினால் 62 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். அதனால், அந்த விவசாயிகளின் கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்.
இந்தியா கூட்டணியில் உள்ள இன்றைய ஆட்சியாளர்கள், பிரதான பிரச்சினையாக உள்ள காவிரி பிரச்சினையை கண்டுகொள்ளாமல் உள்ளனர். காங்கிரஸ் கட்சியும் அவர்களது கூட்டணியில்தான் உள்ளது. எனவே, அவர்கள் இதனை பேசி தீர்க்கலாம். 39 எம்.பிக்களை வைத்துள்ள ஆளும் திமுக அரசு, இதில் கவனம் செலுத்துவதில்லை.
திமுக, மத்திய அரசில் காங்கிரஸ், தேவகவுடா, ஐ.கே.குஜரால் உள்ளிட்டோர் ஆட்சியில் 16 ஆண்டு காலம் திமுக இடம்பெற்று இருந்தது. திமுகவினர் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும்போது, தமிழ்நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் பேச மாட்டார்கள். விவசாயிகள் பிரச்சினையையும் பேச மாட்டார்கள். ஆட்சியில் இல்லாதபோது பேசுவார்கள்.
கோதாவரி – காவிரி இணைப்பு நிறைவேற்றப்பட்டால் 125 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். அதை நிறைவேற்ற பிரதமரிடம் கடிதம் கொடுக்கப்பட்டது. திட்டப்பணி அறிவிப்பும் கொடுத்தனர். அதிமுக அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார் இருவரையும் அனுப்பி தெலங்கானா முதல்வரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தெலங்கானா முதல்வரும் ஏற்றுக்கொண்டார். ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும் ஏற்றுக்கொண்டார்.
இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென் மாநிலத்தில் உள்ள நதிநீர் பிரச்சினை தீர்ந்து விடும். குடிநீருக்கு தேவை என தண்ணீரை எடுத்து வந்தால், மத்திய அரசின் அனுமதியில்லாமல் நிறைவேற்றலாம் என்றும் தெலங்கானா, ஆந்திர முதலமைச்சர்களால் ஆலோசனை தரப்பட்டது. அத்தகைய திட்டத்தையும் தொடராமல் திமுக அரசு கிடப்பில் போட்டு விட்டது.
காவிரி நீரை தமிழகத்துக்கு வழங்குவதில் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கர்நாடக அரசு நடந்து கொள்வதில்லை. கர்நாடகாவில் அணை நிரம்பிய பிறகே நமக்கான தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் குறித்த காலத்தில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. அதனால் விளைச்சல் குறைகிறது.
டெல்டா மாவட்டத்தில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் கால்வாய் சீரமைப்பிற்காக திட்டமிடப்பட்டது. இவை அமையும்போது 20 சதவீத நீர் மிச்சமாகும். கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேறும். இந்த வருடம் தண்ணீர் திறந்துவிட்டும் நாகை, மயிலாடுதுறை கடைமடை வரை தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். கடைக்கோடி வரை தண்ணீர் செல்ல நவீன முறையில் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். இந்த திட்டமும் மத்திய அரசிடம் அளிக்கப்பட்டு அரசும் ஏற்றுக்கொண்டது.
தற்போதைய அரசாங்கம், மத்திய அரசோடு இணக்கமின்றி உள்ளதால் இந்த திட்டங்களை கிடப்பில் போட்டு விட்டனர். நீர் மேலாண்மைக்கென தனி பிரிவை செயல்படுத்த வேண்டும். வீணாக கடலில் சென்று தண்ணீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் ஆசியாவிலேயே பெரிய கால்நடைப்பூங்கா ஆயிரத்து 50 கோடி ரூபாய் மதிப்பில் ஆயிரத்து 20 ஏக்கரில் அமைக்கப்பட்டு ஒரு பகுதி மட்டும் திறக்கப்பட்டது. கால்நடை மருத்துவக்கல்லூரி முடியும் தருவாயில் முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு பயன்படும் இந்த திட்டத்தை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பூட்டி வைத்து விட்டனர்.
அந்த திட்டத்தின் நோக்கம், கலப்பின பசுக்களை உருவாக்கி நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப விவசாயிகளுக்கு இலவசமாக கொடுப்பதாகும். அதிமுக ஆட்சி அமையும்போது கால்நடைபூங்கா திட்டம் நிறைவேற்றப்படும். விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து வர்த்தக சங்க நிர்வாகிகளையும் சந்தித்து கோரிக்கைகளை பழனிசாமி கேட்டறிந்தார். இந்த சந்திப்பு நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.