சென்னை: ராசிபுரம் நகராட்சியை கண்டித்து ஜூலை 16-ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சியில் நிலவி வரும் பல்வேறு நிர்வாகச் சீர்கேடுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி வாழ் மக்கள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ராசிபுரம் நகராட்சியில் மாதம் ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுவதால், மக்கள் குடிநீருக்காக அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ராசிபுரம் நகராட்சியில் தற்போதுள்ள பேருந்து நிலையம் போதிய வசதியுடன் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. இந்நிலையில், இந்தப் பேருந்து நிலையத்தை தேவையில்லாமல் சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அணைப்பாளையம் என்ற கிராமத்துக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி வாழ் மக்களுக்கு நாள்தோறும் முறையாக குடிநீர் வழங்காத, ஆதாய நோக்கத்துக்காக பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய முயற்சி மேற்கொள்ளும் திமுக அரசு மற்றும் நகர மன்ற நிர்வாகத்தைக் கண்டித்தும் நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில் வரும் ஜூலை 16-ம் தேதி காலை 10 மணிக்கு ராசிபுரம் பஸ் நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் நடைபெறும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.